பூண்டு பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் கவலை!

poondu
ஊட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் சூறாவளி காற்று வீசி வருவதால் குளிச்சோலை பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான பூண்டு நாசமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் பெய்யும். இச்சமயங்களில் பலத்த காற்றும் வீசும். இதனால், பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகள் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இது ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழையின் போது நடப்பது வழக்கம். ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை.

அவ்வப்போது காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் காற்றுடன் கூடிய சாரல் மழை மாவட்டம் முழுவதும் பெய்தது. தற்போது ஒரு சில இடங்களில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தாலும், மாவட்டம் முழுவதும் வெயில் அடித்து வருகிறது. எனினும், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுகிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன் பலத்த சூறாவளி காற்று வீசியதால், சில இடங்களில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிர்கள் சாய்ந்து விட்டன. குறிப்பாக, குளிச்சோலை பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிர் சாய்ந்துவிட்டது. இதனால், தரமான பூண்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பூண்டுகள் உடைந்தால் சந்தையில் அதிக விலைக்கு போக வாய்ப்பில்லை. குளிச்சோலை பகுதியில் பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பயிரிட்டுள்ள பட்டாணி செடிகள், டபுள் பின்ஸ் செடிகள் போன்றவையும் சாய்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response