உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நேற்று கொட்டிய மழையில் வெள்ளம்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….

panchalinga
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 20 கி.மீ., தொலைவில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. அங்கு மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது.

கோயிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் மழை நீர், அருவியை கடந்து திருமூர்த்தி அணையை அடைகிறது.

கடந்த சில மாதங்களாக பருவ மழை பொய்த்ததால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது. அதனால், அருவிக்கு வரும் நீரும் நின்றது. இதை அறியாமல் சுற்றுலா வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று பெய்த மழையால், அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல மாதங்களுக்குப் பின் அருவியில் நீர் வரத்து குறித்த தகவல் அறிந்ததும், கோயில் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வந்த பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறையை அருவியில் குளித்து கொண்டாட வேண்டி ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். இந்த ஆண்டும் கோடை விடுமுறை தொடக்கத்தில் இருந்தே ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றனர்.

நேற்று காலை 11 மணி அளவில் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி வெள்ள நீரின் அளவை பார்வையிட்டு, அதன் பின்னரே பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், வெள்ள அபாயம் குறித்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.

Leave a Response