நேற்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்கள் பார்த்து ஆறுதல் கூறி வந்த ரஜினி போராட்டம் போராட்டம் என்று மக்கள் போனால் நாடு சுடுகாடாகிவிடும் என்று கூறினார். மேலும் அவர் சமூக விரோதிகள், விஷமிகள் புகுந்திருக்கிறார்கள் என மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக பலரும் எதிர் கருத்துக்களை கூறியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி தன் சமூகவலை தள பக்கத்தில் தன் கருத்துகளை பதிவு செய்து வந்துள்ளார்.
போராட்டத்தால் ஒரு ஸ்டெர்லைட் மூடப்பட்டு நாடு சுடுகாடாகிவிடும் என்றால் கரூர், திருப்பூர் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் நகரங்கள் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, அரசின் அலட்சியத்தால் சுடுகாடாகி வருகிறதே இது பற்றியெல்லாம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா ரஜினி?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பிஜேபியும், இப்போது ரஜினியும் ஒன்றுபோல ‘ சமூக விரோதிகள்’ பற்றிப் பேசுகிறார்கள். தெரியுமென்றால் அவர்களை அடையாளம் காட்டவேண்டியது தானே? போராட்டத்தை எதற்கு கொச்சைப்படுத்த வேண்டும்?படுகொலை செய்யப்பட்ட 13 பேரும் 17வயது மாணவி உட்பட சமூக விரோதிகளா?
போராட்டத்தால் ஒரு சமூகம் சுடுகாடாகுமென்றால் பிறகு எதற்காக திரைப்படங்களில் போர்க்கோலம் போடுகிறீர்கள்? புரட்சி பற்றிப் பேசுகிறீர்கள்? இந்திய சுதந்திரப் போராட்டம் 300 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதனால் தான் சுடுகாடாகிவிடாமல் இந்த மண் இன்னும் உயிர்த்திருக்கிறது.அப்பொழுதும் உங்களைப் போன்ற அதிகாரத்தின் ஏவலாள்கள் உங்கள் குருநாதர்கள் ( ஆர் எஸ் எஸ்!) இதேபோல் தான் பேசிவந்தார்கள். ஏன் சுதந்திரப்போராளிகளை காட்டிக் கூட கொடுத்தார்கள்.
ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அடிமை தேசத்தில் போராளிகள் உயிர்த்தெழுந்த வரலாறு நம்முடையது. சுதந்திர மண்ணில் மக்களை அடிமைகளாக இருக்கச் சொல்லாதீர்கள். அதுதான் ஒரு தேசத்தை சுடுகாடாக்கிவிடும். போராட்டங்கள் அல்ல.
என ரஜினியின்பேச்சு எதிராக தன் கோபமான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்