அடுத்த மாதம் ஷீரடியில் விமான சேவை துவக்கம்!..

sai-baba-shirdi
சாய்பாபா பக்தர்களுக்கு நல்ல செய்தியாக அடுத்த மாதத்தில் இருந்து ஷிர்டியில் இருந்து பயணிகள் விமானம் இயக்கப்படும் என்று மகாராஷ்டிரா விமான வளர்ச்சி கம்பெனி லிமிடெட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா விமான வளர்ச்சி கம்பெனி லிமிடெட் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான விஸ்வாஸ் எம் பட்டீல் கூறுகையில், ”ஷிர்டி விமான நிலையத்தை மகாராஷ்டிரா விமான வளர்ச்சி கம்பெனி லிமிடெட் நிர்வகிக்கும். இந்த விமான நிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பல இடங்களுக்கு விமான சேவை மேற்கொள்ளப்படும்.

ஷீரடியில் விமான நிலையம் தயாராக உள்ளது, அடுத்த மாதத்தில் இருந்து விமான சேவை துவங்கும். முதலில் இங்கிருந்து உள்நாட்டு சேவையும், பின்னர் வெளிநாட்டு சேவையும் துவங்கப்படும். இதுதொடர்பான வேலைகளில் தற்போது நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இங்கிருந்து 4 அல்லது 5 விமானங்கள் புறப்படுவது மற்றும் இறங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஹைதராபாத், டெல்லி, மும்பைக்கு இயக்கப்படும். பின்னர் மேலும் பல இடங்களுக்கு இயக்கப்படும். தற்போது 2,500 மீட்டர் தொலைவிற்கு ரன்வே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 700 மீட்டருக்கு நீடிக்கும் வகையில் கடந்த மாதம் ரூ. 40 கோடி நிதியை மத்திய விமான போக்குவரத்து துறை ஒதுக்கி இருந்தது.

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஷிர்டி சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரடியாக ஷிர்டி வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். சர்வதேச நாடுகளில் இருந்தும் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

ஷிர்டி விமான நிலையம் அமைப்பதற்கு என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை ஏற்கனவே ரூ. 340.54 கோடி ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிர்டி சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை கொண்டாட ஷிர்டி சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் முடிவு செய்துள்ளது

Leave a Response