முதலையை தாக்கி பள்ளித்தோழியைக் காப்பாற்றிய 6 வயது சிறுமி!..

crocodile
ஒடிசா மாநிலம் கெந்த்ரபாரா மாவட்டம் பங்குலா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமிகள் பசந்தி தலாய், டிக்கி தலாய் இருவரும் அங்குள்ள குளத்திற்கு நேற்று குளிக்க சென்றனர். குளத்தில் இறங்கி இருவரும் குளித்துக்கொண்டிருந்தபோது, மறைவிலிருந்து வெளிப்பட்ட முதலையொன்று பசந்தியை திடீரெனத் தாக்கியது.

இதில் பசந்தி நிலைகுலைந்து போக, சுதாரித்துக்கொண்ட டிக்கி நீண்ட மூங்கில் குச்சியை எடுத்து முதலையின் தலையில் ஓங்கி அடிக்கத் தொடங்கினாள். டிக்கியின் அடியைத் தொடர்ந்து முதலை பசந்தியை விட்டுவிட்டு நீருக்குள் ஓடிவிட்டது.

முதலை கடித்ததில் பசந்தியின் கை மற்றும் தொடைகளில் கடுமையான காயம் ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்காக பசந்தி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டிக்கி கூறுகையில் “ பசந்தியை முதலை திடீரெனத் தாக்கியது. என்ன நடக்கிறது என்பதை அறிய எனக்கு சிறிய அவகாசமே இருந்தது. சமயம் பார்த்து அந்த மூங்கில் குச்சி எனது கைக்கு கிடைத்தது. அதனை வைத்து எனது தோழியைக் காப்பாற்றினேன்” என்றார்.

டிக்கியின் இந்த வீரச்செயலை கிராம மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஒடிசா வனத்துறை பசந்தியின் மருத்துவசெலவை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறை முன்வந்துள்ளது.

Leave a Response