“தரம்சாலா” கோப்பையை வென்றது இந்தியா:-ஆஸி., ஏமாற்றம்..

india
தரம்சாலா வில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் லோகேஷ் ராகுல், ரகானே அசத்தல் ஆட்டம் கைகொடுக்க இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரை 2 – 1 என கைப்பற்றி கோப்பை வென்றது. ஆஸ்திரேலிய அணி ஏமாற்றம் அடைந்தது.

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் தொடர் 1 – 1 என சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 300, இந்தியா 332 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 137 ரன்களுக்கு ஆல் – அவுட்டானது. இதனையடுத்து, 106 ரன்கள் இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் (13), முரளி விஜய் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. கம்மின்ஸ் ‘வேகத்தில்’ முரளி விஜய் (8) ஆட்டமிழந்தார். புஜாரா (0) ரன் – அவுட்டானார். பின் இணைந்த லோகேஷ் ராகுல், கேப்டன் ரகானே ஜோடி சிறப்பாக செயல்பட்டது. கம்மின்ஸ் வீசிய 16வது ஓவரில் ரகானே தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார். இவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு தந்த ராகுல் அரை சதம் அடித்தார். இவர்களின் அசத்தலான ஆட்டம் கைகொடுக்க இந்திய அணிக்கு வெற்றி எளிதானது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (51), ரகானே (38) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா டீம்க்கு வாழ்த்துகள் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். சிறந்த வெற்றி. தொடர் வெற்றிக்கு பாராட்டுகள் எனக்கூறியுள்ளார்.

மற்ற அணிகள் வெற்றி பெற இந்தியா கடின இடம். அனுபவமில்லாத இளம் ஆஸி., அணி தோல்வியடைந்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று ஆஸி.,அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார்…

Leave a Response