‘கஞ்சாவை கேளிக்கை கூடங்களில் பயன்படுத்த கனடா அரசு விரைவில் அனுமதி!..

Cannabis-Flower-1
கேளிக்கை கூடங்களில் போதைப் பொருளான கஞ்சாவை முறையான கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த கனடா அரசு விரைவில் அனுமதியளிக்க உள்ளது. இயற்கை தாவரமான கஞ்சா உலகில் முக்கிய போதைப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சில நாடுகளில் மருத்துவ பயன்பாடுகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கஞ்சாவானது, சில நாடுகளில் முறையான கட்டுப்பாடுகளுடன் கேளிக்கை விடுதிகளில் பயன்படுத்த அனுமதி உண்டு. அமெரிக்காவின் சில மாகாணங்களில் கஞ்சாவை கேளிக்கை விடுதிகளில் அளவான முறையில் பயன்படுத்த அரசு அனுமதித்துள்ளது.

போதை பொருட்களின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் சில நாடுகளில், எவ்வித கட்டுப்பாடுகளின்றி கஞ்சாவை பயன்படுத்துவோரும் உண்டு. அதே போல, கஞ்சா முற்றிலும் தடை செய்யப்பட்ட பொருளாக இந்தியா போன்ற சில நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் கஞ்சா பயன்பாட்டை அரசால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கனடா நாட்டில் உள்ள கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை பயன்படுத்த உரிய சட்டம் அடுத்த வாரத்தில் கொண்டுவரப்பட இருப்பதாக அந்நாட்டு பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கேமரோன் அஹமது தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

இச்சட்டத்தில், கஞ்சாவை பயன்படுத்த குறைந்தபட்ச வயது 19 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு நபருக்கு அதிகபட்சமாக 30 கிராம் கஞ்சா அனுமதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கேளிக்கை விடுதிக்கு வெளியே கஞ்சா பயன்படுத்துவதற்கான தடை அப்படியே தொடரும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது…

Leave a Response