குவீன்ஸ்லாந்தைப் புரட்டிப் போடும் டெபி புயல்!

AUSTRALIA-CYCLONE
டெபி என்ற 4-ம் எண் வலுவுள்ள புயல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையை கடந்து கொண்டிருக்கிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அது தற்போது ஏர்லி கடற்கரையைக் கடந்து கொண்டிருக்கும் நிலையில் ‘பேரழிவு’ புயல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத் தகவலின் படி போவென், ஏர்லி கடற்கரைப்பகுதிகளை அது கடக்கும் போது மணிக்கு 270 கிமீ வேகத்தில் கடும் காற்று வீசும்.

குவீன்ஸ்லாந்தை டெபி புயல் தாக்கி வருகிறது. கடும் மழையும் பெய்து வருகிறது. பெருவெள்ளத்திற்கான சாத்தியங்களும் இருப்பதாக சிஎன்என் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

4-ம் எண் புயற்காற்று 3-ம் எண் சூறாவளிக்குச் சமமானது. ஏற்கெனவே கடற்கரை தீவுப்பகுதிகளை புரட்டிப் போட்டு விட்டது டெபி புயல், ஏகப்பட்ட மரங்கள் விழுந்தன. குறிப்பிடத்தகுந்த அளவு அதிகன மழை பதிவாகியுள்ளது.

குடியிருப்புகளில் வீடுகள் ஆட்டம் கண்டன, ஜன்னல் கண்ணாடிகள் பறந்தன. வீட்டு மேற்கூரைகள் பறந்தன. திங்களன்று சூரிய ஒளியுடன் திகழ்ந்த கடற்கரைகள் இன்று வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஒரு மணி நேரத்தில் 211 மிமீ மழை பதிவாகியுள்ளதாக குவீன்ஸ்லாந்து தலைவர் அனாஸ்டேசியா பலாஸ்சுக் தெரிவித்தார்.

இது நூறாண்டுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வு என்கிறார் அவர்.

இதில் பெரிய அளவில் உயிர்ப்பலி இல்லை என்றாலும் 31 வயது பெண்மணி ஒருவர் பிராசர்பைன் என்ற நகரில் பலியானார்.

மிகவும் மெதுவாக கரையைக் கடந்து வரும் இந்தப் பெரிய புயலின் விளைவினால் மீட்புப் பணிகள், உதவிகள் புதன் கிழமைதான் கிடைக்கும் என்று தெரிகிறது.

புதன் மதியம் வரை இந்தப் புயல் அமைப்பு, காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறாது. புயல் முழுதும் கடற்கரையைக் கடப்பதற்கு 6 மணி முதல் 14 மணி நேரம் வரை ஆகும்.

ஆஸ்திரேலிய ஊடக நிருபர் ஒருவர் குவீன்ஸ்லாந்திலிருந்து கூறும்போது, “போர் விமானம் போல் காற்று ஓலமிடுகிறது” என்று கூறியுள்ளார்.

மின்சாரம் துண்டிப்பு, தொடர்புக் கருவிகளின் செயலின்மை புயல் வீசும் பகுதியில் உள்ளவர்களை பெரும் பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.

புயலின் மையம் கரையைக் கடக்க 3 மணி நேரம் ஆகும் என்றும் அதன் பிறகுதான் மோசமான விளைவு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் அங்கு இன்னமும் பதற்றம் நிலவி வருகிறது.

Leave a Response