ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர் பிரிஜ்ஜோ, கடந்த 6-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கையின் இந்த தாக்கு தல், தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியான பிரிஜ்ஜோவின் உடல், ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது அவரது கழுத்தில் பாய்ந்தது ஏ.கே.47 ரக குண்டு என தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயம் முன்பு அமைதியான முறையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், அவர்களது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான உறுதிமொழியை, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும். அதன் பிறகே மீனவர் பிரிஜ்ஜோ உடலை வாங்குவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறி வருகின்றனர்.
2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பா. ஜனதா மாநில துணைத்தலைவர்கள் குப்புராமு, நாகராஜன், அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, சுப. தங்கவேலன், எம்.ஜி.ஆர்.- அம்மா-தீபா பேரவை தலைவர் தீபாவின் கணவர் மாதவன், திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலர் சந்தித்து ஆறுதல் கூறினர். மீனவர் பிரச்சினையில் நியாயம் கிடைக்க தங்கள் இயக்கம் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என அவர்கள் உறுதி அளித்தனர்.
மீனவர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவ, மாணவர்கள், பெண்கள் என பலரும் தங்கச்சி மடத்தில் திரண்டு வருகின்றனர். சென்னை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்ட களத்திற்கு வந்தனர். அவர்கள் கூறுகையில், ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றுக்கான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், மீனவர் போராட்டத்திலும் அணி வகுப்பார்கள். இன்னும் பல பகுதி மாணவர்களும் இங்கு விரைவில் வருவார்கள் என்றனர்.
போராட்ட களத்திற்கு தொடர்ந்து பலரும் வந்த வண்ணமே இருப்பதால், அவர்களுக்கு தேவையான உணவு தயாரிக்கும் பணி, அங்கேயே நடைபெற்றது. மீனவ மக்கள், திறந்த வெளியிலேயே சமைத்து அனைவருக்கும் வழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறும்போது, எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம். வருகிற 11,12-ந் தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு ஆலய திருவிழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றனர். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு மாவட்ட கலெக்டர் நடராஜன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கோட்டாட்சியர் ராமபிரதீபன் மற்றும் அதிகாரிகள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. 14-ந் தேதி உங்களை (மீனவர்கள்) வெளியுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அதிபர் சிறிசேனா, இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என உறுதி அளித்துள்ளார். எனவே போராட்டத்தை கைவிட்டு மீனவர் பிரிஜ்ஜோ உடலை பெற்று நல்லடக்கம் செய்ய வேண்டும் என கலெக்டர் நடராஜன் கூறினார்.ஆனால் இதனை ஏற்க மீனவர்கள் மறுத்து விட்டனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு உறுதி அளிக்காத வரை, போராட்டத்தை கைவிட மாட்டோம். மீனவர் பிரிஜ்ஜோ உடலை வாங்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்த மீனவர்கள், 3-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள், பெண்கள் தொடர்ந்து தங்கச்சிமடம் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளர்.