டில்லியில் கார் கட்டுப்பாடு சலுகைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் – ஒரே காரில் பயணம்…!

ODDEVENPOLITION

டில்லியில் ஞாயிறு தவிர்த்து, வாரத்தில் மூன்று நாட்கள் வீதம், ஒற்றைப் படை மற்றும் இரட்டைப்படை பதிவெண்களில் முடிவடையும் கார்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 முதல் அமலுக்கு வந்த இத்திட்டப்படி, முதல் நாள் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, ஒற்றைப் படை பதிவெண்களை உடைய கார்கள், டில்லி சாலைகளில் ஓட அனுமதிக்கப்பட்டன. இரண்டாம் நாள், இரட்டைப்படை பதிவெண் கார்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் ஞாயிறுக்கிழமை, கார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விலகப்பட்டது. அனைத்து கார்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது. சோதனை அடிப்படையிலான இத்திட்டம், வரும், 15ம் தேதி வரை அமலில் இருக்கும். கார் போக்குவரத்து கட்டுப்பாடு அமலுக்கு வந்த இரண்டுநாட்களில், டில்லியில் காற்று மாசு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கார்க்கட்டுப்பாட்டை பின்பற்ற சுப்ரீம் கோர்ட்தலைமை நீதிபதி முடிவு செய்துள்ளார்.

கார் கட்டுப்பாட்டிலிருந்து நீதிபதிகள் உட்பட பல பிரிவினருக்கு அரசு விதிவிலக்கு அளித்திருந்தாலும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் டில்லியில் நடைமுறையில் உள்ள கார் கட்டுப்பாட்டை மதிக்கும் வகையில், தனித் தனியாக கார்களில் செல்வதற்குப் பதில் குறிப்பிட்ட இலக்க எண் காரில் ஒன்றாக செல்வதென முடிவு செய்துள்ளனர். இதை வரவேற்றுள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், நீதிபதிகளுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர்கள் இந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடிவு செய்திருப்பது லட்சக்கணக்கானவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்,

கார் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம் டெல்லியில் வெற்றி பெற்றதால், ஆமதாபாத் நகரும் அந்த திட்டத்தை பின்பற்ற உள்ளது. அதேபோல், காற்று மாசு அதிகம் உள்ள சென்னையிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Response