ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மல்லுக்கட்டும் பா.ஜ.க. – காங்கிரஸ்..!

jallikattu

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசியல் கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுத்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தை வைத்து தமிழகத்தில் பா.ஜ.,-  காங்., இடையே மிகப் பெரிய மோதல் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இளங்கோவனின் கருத்து குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்.,ன் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழக காங் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்கிறார். ஆனால் டில்லி காங்., செய்திதொடர்பாளர் அபிஷேக் சிங்வி ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார். ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் என்ற தமிழக காங்., தலைவர்களின் கோரிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது காங்., அப்படியானால் காங்., தான் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பா.ஜ., முடிவு காண நினைக்கிறது. ஆனால் காங்., பிரச்னையை கிளப்பி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response