பசங்க 2 திரைவிமர்சனம் – பெற்றோர்கள் படம் பார்ப்பது குழந்தைகளுக்கு நல்லது.!

pasanga ottran

குழந்தைகளின் மனநிலையை சரியாக புரிந்துகொண்டு, அவர்கள் செய்யும் சேட்டைகள், குறும்புத்தனங்கள் என அவர்கள் சிறுவயதில் செய்யும் அனைத்து விசயத்தையும் பசங்க முதல் பாகத்திலேயே கூறி பாராட்டை பெற்றவர் பாண்டிராஜ். எனவே பசங்க இரண்டாம் பாகத்திற்கு அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சூர்யாவும் அவருடன் இணைந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் கொஞ்சம் அதிகமானது. ஒரு படத்தை எடுக்கும்முன் அதுபோன்ற கதைகொண்ட படங்கள் வெளிவந்துவிட்டால், இந்த படத்தை மக்களிடம் போய் சேர்வது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான்.

நான் ஹிந்தியில் வெளிவந்த ‘தாரே ஜமீன் பர்’ ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஆனால் அந்த படத்தில் எனக்கு உணர்த்தாத ஒரு விஷயம், பசங்க 2 படம் உணர்த்தி உள்ளது. பசங்க 2 படத்தின் பத்திரிக்கை சந்திப்பின்போது, இந்த நோயை கொண்ட படங்கள் இதற்கு முன் வரவில்லை. இது ‘தாரே ஜாமீன் பர்’ படத்தை போன்ற இருக்காது எனக்கூறினார். அதன் அர்த்தம் எனக்கு படம் பார்த்தபின்பு தான் புரிந்தது. சிலர் அந்த படத்தை ஒப்பிட்டு இதை விமர்சனம் செய்கின்றனர். எப்பொழுதுமே முதலில் பார்த்த படத்தை மனத்திரையில் ஓடவிட்டு, அதில் வருவது போன்று இதில் உள்ளதா என வெளித்திரையில் ஓடும் படத்தை அலசுவதைத்தான் இங்கு பெரும்பாலானோர் செய்து வருகின்றனர். ஆனால் இந்த படம் இது போன்ற நோய் உடைய குழந்தைகளின் அருகில் உள்ளவர்களுக்கு தான் 100% புரியும். என் ஊரிலும் இப்படி ஒரு சிறுவன் இருக்கின்றான். இந்த படத்தில் வரும் சிறுவனின் கதாப்பாத்திரம் அவனை ஜெராக்ஸ் போட்டது போல இருந்தது. அவன் சுட்டிதனம் மட்டுமே ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்தது. அவனை யாரும் புரிந்துகொள்ள வில்லை. அப்படி பார்த்தால் இதை அவனுடைய காப்பி என்று கூறமுடியுமா?

இன்றைக்கு இருக்கும் நாகரிக வளர்ச்சியில், குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இப்படி ஒரு சூழ்நிலையில் அவர்கள் மனநிலையை புரிந்துகொள்ளாமல் நம் ஆசையை அவர்கள் மீது திணித்தால், இந்த நோய் வராத குழந்தைக்கு கூட வந்துவிடும். அந்த காலத்தில் பள்ளிக்கு செல்வதை விட்டு விட்டு 70% மேற்பட்டோர் ஊர் சுற்றி, சுற்று சூழலை கற்றுக்கொண்டனர். அது அவர்களுக்கு அப்பொழுது உதவியாய் இருந்தது. ஆனால் இன்று பெருகிவிட்ட தொழில்நுட்ப உலகில், படிப்பறிவு இல்லாதவர்கள் வாழ்கையை வாழ்வதே ஒரு பெரிய போராட்டமாக கருதுகின்றனர். இதனாலேயே தங்கள் குழந்தைகள் மீது அனைத்தையும் திணிக்கின்றனர். இதனாலேயே விவசாயின் குழந்தைகள் மண்வெட்டியை மறந்து விட்டு மடிக்கணியை பிடிக்கின்றனர். அதில் பலர் விவசாயமும் தெரியாமல், பொறியாளராகவும் வேலைகிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நம்முடைய கல்வி முறை 50 வருட பழமையான முறையே, இன்னும் நீடித்து வருவது தான் இதற்கு முக்கிய காரணம். எனவே குழந்தைகளின் மனநிலை என்ன என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொள்ள இப்படம் உதவும். அதேபோல் குறைபாடு கொண்ட குழந்தைகளை தட்டிக்கொடுத்து வளர்க்கவும், இந்த படத்திற்கு பின் பெற்றோர்கள் தயாராகிவிடுவார்கள். இப்படி ஒரு கதையை கொடுத்து மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிரூபித்துள்ளார் பாண்டிராஜ். குழந்தைகளை நினைத்து பீல் செய்யாமல், படம் முழுக்க நம்மை சிரிக்கவும் வைத்துள்ளார். குறைந்த நேரமே படத்தில் வரும் அமலாபால் ஒரு நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். அதேபோல் சூர்யா இப்படிபட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது வரவேற்கதக்க விஷயம். மேலும் ராம்தாஸ், பிந்து மாதவி, கார்த்தி குமார், வித்யா பிரதீப் ஆகியோர் கதைக்கு மிகச்சரியாக பொருந்தியுள்ளனர். படத்திற்கு இசையின் மூலம் கூடுதல் பலத்தையளித்துள்ளார் ஆரோல் கரோலி. ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக உள்ளது.

மொத்தத்தில் இந்த படத்தை பெற்றோர்கள் பார்ப்பது அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

Satheesh Srini

Leave a Response