பிளஸ் என்ன? மைனஸ் என்ன?? – காப்பான் திரை விமர்சனம்…

இயற்கை விவசாயம் செய்து வருபவர் ராணுவ உளவு பிரிவு அதிகாரி சூர்யா. இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோகன்லாலை, தீவிரவாதிகள் கொள்ள முயற்சிக்க, அங்கு பத்திரிகையாளர் போர்வையில் சென்றுள்ள சூர்யா பிரதமரை காப்பாற்றுகிறார்.

பிரதமரை காப்பாற்றிய சூர்யா பிரதமர் மோகன் லாலை சந்திக்கிறார், ராணுவ உளவு பிரிவிலிருந்து பிரதமர் தனி பாதுகாப்பு பிரிவான SPG பிரிவுக்கு மாற்றப்படுகிறார் சூர்யா. இந்த பிரிவில் கமெண்டாண்டாக இருப்பவர் சமுத்திரகனி.

ஒரு கட்டத்தில் பிரதமர் மோகன் லால் தீவிரவாதிகளால் கொல்லலப்படுகிறார், பிறகு அவருடைய வாரிசான ஆர்யா பிரதமராக பொறுப்பேற்கிறார். மீதி கதையை திரைப்படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

மோகன் லால் எப்போதும் போல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு குறை வைக்காமல் தன்னுடைய பணியை சிறக்க செய்துள்ளார். சூர்யா இயற்கை விவசாயியாக வரும் சில நிமிடங்கள், அந்த நிலங்கள் அனைத்தும் பசுமையானதாக தெரிகிறது, விவசாயம் செய்யவேண்டும் என்று நம்மை ஈர்க்கும் அளவுக்கு இருக்கிறது. திடீரென பைக்கை எடுத்து கொண்டு போய் ராணுவ தளத்தில் உள்ள கழிவை திருட்டுதனமாக அழித்துவிட்டு வரும் காட்சிகள் சூர்யா நல்லவரா, கெட்டவரா என ஆடியன்ஸை கொஞ்சம் நேரம் யோசிக்க வைக்கிறது. SPG காஸ்ட்யூம், மற்றும் அந்த கதாபாத்திரம் சூர்யாவிற்கு அறவே பொருந்தியுள்ளது.

படத்தின் நாயகி சயீஷா பிரதமர் அலுவலக தனி செயலாளராக நடித்துள்ளார். இங்கு தான் சூர்யாவிற்கும், சயீஷாவுக்கும் காதல் ஏற்படுகிறது. சயீஷாவின் பிரதமர் அலுவலகம் கதாபாத்திரம் தேவையற்றது என்றாலும், அவருடைய காதல் கதாபாத்திரத்தில், பாடல் காட்சிகளில் அசத்துகிறார் சயீஷா.

ஆர்யா பிரதமராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு பையன் போலவே நடந்துகொள்ளும் விதம் சில நேரங்களில் நம்மிடையே ஒரு மத்திய அரசியல் தலைவர் சில நேரங்களில் செய்யும் சின்ன பிள்ளை தனமான செயல்கள் தான் நியாபாகப்படுத்துகிறது. பிரதமர் ஆர்யா ஒரு முக்கிய மீட்டிங் நடக்கும் போது, அவருடைய இருக்கையில் அமர்ந்திருக்கும் காட்சி, தற்போது சிறையில் இருக்கும் ஒரு முன்னாள் முதல்வர் மேனரிசத்தை குறிப்பிடும்படி உள்ளது. ஆர்யாவின் இந்த காட்சிகள் அரங்கத்தை சிரிக்க வைக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போன்ற ஒரு மாசு ஏற்படுத்தும் சுரங்க தொழிற்சாலை பிரச்சனையை மையமாக காட்டியுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த. படத்தில் தொழிலதிபர் கதாபாத்திரம் மிக வலுவானது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி நடித்துள்ளார். அவருக்கு உதவியாக சிராஜ் ஜானி நடித்துள்ளார். பொம்மன் இரானி மற்றும் சிராஜ் ஜானி கதாபாத்திரம் தான் படத்தின் பலம். இருவரும் தங்கள் நடிப்பில் நியாயம் செய்துள்ளனர்.

படத்தில் நடித்துள்ள இயக்குநர் சமுத்திரகனி, பிரேம்குமார், கலை இயக்குநர் கிரண் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு தங்களுடைய நடிப்பில் நியாயம் செய்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை சுமார் ரகம். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ். எடிட்டர் ஆண்டனி தன்னால்.முடிந்ததை செய்துள்ளார். திலிப் சுப்ராயன், பீட்டர் ஹெயின் சண்டை காட்சிகள் அருமை, படத்திற்கு பலம்.

ஒட்டு மொத்தத்தில், நடிகர்கள், நடிகைகள் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து நடித்திருந்தாலும், பல நடிகர்கள் திணிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை. பிரதமர் அலுவலகத்தில் சயீஷா பணி என்ன என்பதும் கேள்வி குறி தான்… இயற்கை விவசாயம், SPG பாதுகாப்பு, மாசு படுத்தும் தொழிற்சாலை அனைத்தையும் காண்பித்து எதை பற்றியும் முழுவதுமாக சொல்லாதது திரைக்கதையின் பெரிய ஓட்டை. மேக்கிங்கிலும் கோட்டைவிட்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த.

லைகா என்ற நல்ல தயாரிப்பு நிறுவனம், மோகன் லால், சூர்யா, ஆர்யா, சயீஷா போன்ற பெரிய நட்சத்திரங்களை கொண்டு ஒரு படத்தை முழுமை படுத்த தவறிவிட்டார் இயக்குநர் கே.வி.ஆனந்த் என்று தான் சொல்ல வேண்டும்.

இனியாவது சூர்யா கதை கேட்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெட்டர் லக் நெஸ்ட் டைம்.

Leave a Response