சென்னையின் பழமை வாய்ந்த அம்மன் ஆலயமான கெங்கை அம்மன் ஆலய திருக்குடமுழுக்கு விழா மார்ச் 25, 2015 அன்று மிக விமரிசையாக நடந்தது.
சென்னை காளிகாம்பாள் கோயில் உபாசகர் மற்றும் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் சிவாச்சாரியார் முன்னிலையில் இந்த விழா அன்று காலையில் நடந்தது.
சென்னை நகரம் உருவாவதற்கு முன்பே ராமாபுரம் கிராமத்தில் அம்மன் எழுந்தருளிய ஆலயம்தான் இந்த கெங்கை அம்மன் கோயில். அப்போது கோயில் என்று தனியாக கட்டப்படவில்லை. இயற்கை வழிபாட்டு முறைப்படி, கிராமத்தின் நெடுஞ்சாலையில் ஒரு பிரமாண்ட ஆலமரத்தின் அடிப்பகுதியையே அம்மனாக நினைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த ஆலமர முகப்பு அப்படியே அம்மனின் முக உருவம் போலத் திகழ்ந்தது.
இந்த மரத்துக்கு நேர் பின்னால் பிரமாண்ட குளமும் உண்டு. காலப் போக்கில் இந்த ஆலமரத்தையொட்டியே சிறு ஆலயம் ஒன்றை எழுப்பி வழிப்பட்டு வந்தனர்.
சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் உண்மையான வேண்டுதல்கள் நிறைவேறி வந்தது மட்டுமல்ல, இந்தக் கோயிலே அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தது. இன்றைக்கும் திகழ்கிறது.
இந்த தலத்தின் விசேஷமே, இன்றும் தமிழர்களின் ஆதி வழிபாட்டு முறையான, இயற்கை வழிபாடுதான். அம்மனுக்கு செய்வதைப் போன்றே தல விருட்சமாக உள்ள அரச மரத்துக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள் மக்கள்.
வேண்டுதல் எதுவாக இருந்தாலும், அதற்கென தனி பிரார்த்தனை முறை எதுவும் இல்லை. மனத் தூய்மையுடன் வேண்டிக் கொண்டாலே போதும், நினைத்தது நடக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா…
ஆண்டுதோறும் சித்திரை மாதம் இந்தக் கோயில் திருவிழா மிகப் பிரமாண்டமாக நடக்கும். இந்த ராமாபுரம் பகுதியே கோலாகலமாகக் காணப்படும். நாமிருப்பது சென்னைதானா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள், திருத்தேர் உலா என திருவிழா களைகட்டும். கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும் இடம் பெறும்.
புதிய பிரமாண்ட ஆலயம்
தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட அம்மனுக்கு மிகப் பெரிய ஆலயம் எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கனவாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து இந்த புதிய ஆலயத்தை உருவாக்கியுள்ளனர்.
சென்னை நகருக்குள் இவ்வளவு பெரிய கெங்கை அம்மன் ஆலயம் அமைந்திருப்பது ராமாபுரத்தில்தான் எனும் அளவுக்கு மிகச் சிறப்பாக புதிய ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் எனும் திருக்குடமுழுக்கு நிகழ்ச்சி மார்ச் 25, 2015 அன்று காலை 6 மணிக்குத் தொடங்கி 10.30 வரை நடந்தது. சென்னை காளிகாம்பாள் கோயில் உபாசகரும் தலைமை அர்ச்சகருமான டிஎஸ் காளிதாஸ் சிவாச்சாரியார் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
புனித நீரை அருகில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலிலிருந்து யானை, குதிரை, பசுவுடன் ஊர்வலமாக எடுத்து வந்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக நாளன்று மாலை அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.