திருமாவளவனுக்கு ஹிந்து மதம் குறித்து பேசுவதற்கு தகுதியில்லை! – நாராயணன் திருப்பதி

சில தினங்களுக்கு முன்பு ஒரு யூடியூப் சேனலில் இந்துக்கள் பூஜிக்கும் தமிழ் கடவுள் முருகனை பற்றி ஆபாசமாகவும், இழிவாகவும் பேசியிருந்தனர். இந்த பேச்சை எதிர்த்து, பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த காவல் துறையினர், முருகரையும் மற்ற இந்து கடவுள்களையும் ஆபாசமாகவும், இழிவாகவும் பேசியவர்களில் நால்வரை கைது செய்துள்ளனர்.

இந்த கைதை கண்டிக்கும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பேசுகையில், “இது வரையில் ஒரு பிராமணர் கூட பழனிக்கோ, திருத்தணிக்கோ, அறுபடை வீடுகளுக்கோ அலகு குத்தி காவடி எடுத்து போனதுண்டா? அவர்கள் முருகனுக்காக பேச வரிந்து கட்டி கொண்டு வருகிறார்களே? தமிழ் கடவுள் முருகனனை பற்றி பேசுவதற்கு தமிழர்கள் வரட்டும்? யாரை ஏய்க்க? யாரை ஏமாற்ற? யார் மீது அவதூறு பரப்புவது? யார் மீது பழி சுமத்துவது? தி மு க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக தான்” என தெரிவித்திருந்தார் திருமாவளவன்.

திருமாவளவனின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக பா.ஜ.க’வின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பிராமணர்கள் அலகு குத்தி காவடி எடுத்ததில்லை என்ற திருமாவளவன் கூறுவதே உண்மைக்கு புறம்பானது. ஒரு வாதத்திற்காக அவர் சொல்வது போல், அலகு குத்தாதவர்கள், காவடி தூக்காதவர்கள் முருகன் குறித்து பேசக்கூடாது என்றால், தான் ஹிந்து மதத்தை சாராதவன் என்றும், ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லை என்று கூறும் திருமாவளவனுக்கு ஹிந்து மதம் குறித்து பேசுவதற்கு தகுதியில்லை என்பதை உணரவேண்டும். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இறைவன் குறித்த விமர்சனத்தை முன்வைப்பது முறையற்றது என்பதை தான் தொடர்ந்து சொல்கிறோம். நாத்திகர்களாக இருப்பதற்காக நாம் அவர்களை விமர்சனம் செய்வதில்லை. ஆனால் அவர்கள் இறை நம்பிக்கையை விமர்சனம் செய்வதை, கொச்சைப்படுத்துவதை தான் கடுமையாக எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம். முருகன் என்ற சொல்லுக்கு ‘அழகு’ என்ற பொருளுண்டு. அழகை ஆராதிக்க வேண்டும். அதை விடுத்து, கொச்சைப்படுத்துவது குரூர எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே முடியும். அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் குரூர எண்ணம் கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள்.

யார் தமிழர் என்று திருமாவளவன் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுதும் பல நாடுகளில் உள்ள தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களே. தமிழை ஏற்று கொண்ட அனைவரும் தமிழரே. தமிழர்களை ஏய்த்து, ஹிந்துக்களின் மீது அவதூறு பரப்பி, பிராமணர்களின் மீது பழி சுமத்தி அரசியல் பிழைப்பு நடத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் மீண்டும் அராஜக ஆட்சியமைத்து விடக்கூடாது என்பதற்காக அலகு குத்தி, காவடி தூக்கி முருகப்பெருமானின் அருள் பெற தயாராகி விட்டனர் தமிழர்கள். தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அலகு குத்தி, காவடி தூக்க முன்வருவாரா திருமாவளவன் அவர்கள்?” என பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Response