திமுக மற்றும் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி தலையில்லாத உடல் போன்ற கூட்டணி – முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!

அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பாக வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டங்களை நடத்தி வருகிறது. சேலம் நெய்காரப்பட்டியில் உள்ள பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 20) அதிமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் பழனிச்சாமி சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து பேசினார்.

அப்போது எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசியதாவது :-

திமுக மற்றும் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காமல், தலையில்லாத உடல் போன்ற கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். ஆனால் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. உழைப்பால் உயர்ந்த கட்சிகள் இங்கு உள்ளன. கடந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37, பாமக, பாஜக தலா 1 என்று தமிழகத்திலுள்ள 39 இடங்களையும் கைப்பற்றின. எதிரணியில் உள்ள கட்சிகள் 1இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

பாஜகவை மதவாதக் கட்சி எனக் கூறும் திமுக இதற்கு முன்னர் ஏன் அந்தக் கட்சியோடுக் கூட்டணி அமைத்தது. பதவிக்காக அல்லாமல், நாட்டு மக்களின் நன்மைக்காக, நாட்டின் பாதுகாப்புக்காக நாங்கள் இந்தக் கூட்டணி அமைத்துள்ளோம். நாட்டிற்கு பாதுகாப்பு தரும் ஒரேக் கட்சி பாஜக தான் எனக் கூறினார்

Leave a Response