துவங்கியது உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டு”..!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடக்கிவைத்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க உலகின் பல நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவதுண்டு. அதன்படி இன்றும் ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். சற்றுநேரத்திற்கு முன்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 1,400 காளைகளும், 800க்கும் மேற்பட்ட காளையர்களும் பங்கேற்றுள்ளனர்.

நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு மருத்துவக் குழு, கால்நடை மருத்துவக் குழு, மேலும் காயம் ஏற்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

Leave a Response