கோவிலில் அனுமதியுடன் நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு ? தமிழிசை..!

கோவில் வளாகத்தில் உரிய அனுமதியுடன் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு பந்தல் போடப்பட்டுள்ளது. கோயிலின் உள் பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், பந்தல் அமைக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் கோயிலை ஒட்டி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது போன்ற படங்கள் பகிரப்பட்டு வருகிறது.

கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இது தமிழக பாரம்பரியத்தை சிதைக்கும் செயல் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வணிக நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நடத்த கோயிலின் உள்ளே அரங்கம் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் விவகாரத்திற்கும், திருமாவளவனுக்கும் பதில் சொல்லும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு இன்றை பகிர்ந்துள்ளார். அதில் ”கோவில் வளாகத்தில் உரிய அனுமதியுடன் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு? இதை கடவுள் மறுப்பாளர்கள் கூறுவது ஏன்? இதே போலி மதசார்பாளர்கள்தான் தாமிரபரணி புஷ்கரத்தை எதிர்த்தார்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர காத்திருக்கும் திருமாவளவன், ராகுல் காந்தியின் தேர்தல் நேர ஆன்மீக யாத்திரையை கண்டிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response