கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல்..!

மழை வெள்ளம் காரணமாக வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளாவில் மழை வெள்ளசேதங்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டு வருகிறார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இரண்டு நாட்கள் பயணமாக கேரள வெள்ளப் பாதிப்புகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்க செல்வதாக டிவிட்டரில் தெரிவித்திருந்த ராகுல்காந்தி, அதன்படி இன்று காலை கேரளாவுக்கு வருகை தந்து
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வருகிறார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 10 நாட்கள் வரலாறு காணாத மழை கொட்டியது. இதன்காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அணைகள் நிரம்பிய தால் அதில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்பல பகுதிகளை மூழ்கடித்தது.

மழை வெள்ளம் காரணமாக பேரழிவை சந்தித்துள்ள கேரளாவுக்கு மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெள்ள சேதம் குறித்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து பார்வையிட்டனர்.

இந்த கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கேரள வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதியான செங்கானூர் பகுதிக்கு சென்று வெள்ளச்சேதங்களை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, அங்கு நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களுக்கு அரசு வழங்கி வரும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அதையடுத்து, ராகுல்காந்தி ஆலப்புழா செல்கிறார். அங்கு மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டும், அந்த பகுதி மக்களிடைம் உரையாடிய பின்பு இன்று மாலை ஆலப்புழா பகுதியில் கேரள மீனவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

நாளை ராகுல்காந்தி, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இங்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியபின்பு அவர் நாளை மாலை டில்லி புறப்படுகிறார்.

Leave a Response