‘புளுவேல்’ குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு!

blue-whale3

சிறுவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டும் ‘புளுவேல்’ இணைய விளையாட்டுக்கு நாடு முழுவதும் பல இளைஞர்கள், மாணவர்கள் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இருந்து பரவியதாக கூறப்படும் இந்த விளையாட்டுக்கு அந்நாட்டில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விளையாட்டை தடை செய்யக் கோரி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்னேஹா கலிதா பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘புளு வேல்’ விளையாட்டை தடுக்கவும், கண்காணிக்கவும் நிபுணர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். இந்த விளையாட்டின் அபாயங்கள் குறித்து பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை தூர்தர்ஷன் தயாரித்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

bluvel

இந்நிலையில், வழக்கின் மறுவிசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று நடந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘புளு வேல் விளையாட்டு இணைய முகவரியாகவோ, இணையதளமாகவோ, ‘ஆப்’ வடிவிலோ இல்லை. ‘வாட்ஸ்ஆப்’ மூலம் இந்த விளையாட்டு பரவியுள்ளது. எனவே, இதை தடை செய்ய முடியாது. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு இடைக்கால அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் தற்கொலைக்கு பள்ளிகளில் தரப்படும் படிப்புக்கான நெருக்கடி, தேர்வு பயம் மற்றும் சக மாணவர்களின் நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்’ என்றும் தெரிவித்தனர்.

ucha

இதையடுத்து நீதிபதிகள், ‘புளுவேல் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆசிரியர்கள், பெற்றோருக்கு முழு பொறுப்பு உண்டு. பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணித்து ‘புளுவேல்’ அபாயத்தில் இருந்து காக்க வேண்டும். வாழ்க்கையின் அர்த்தத்தையும், அன்பையும் அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மனுதாரர் தரப்பில் ஆலோசனைகள் இருந்தால் அவற்றை மத்திய நிபுணர் குழுவுக்கு அனுப்பலாம் என்றும் அறிவுறுத்தினர்.

Leave a Response