‘இப்படியும் ஒரு ராணுவ வீரரா?’ -வியக்க வைக்கும் அனுஹாசன்! ‘வல்ல தேசம்’ சினிமா விமர்சனம்

Valla-Desam
பெண்களை பெருமைப்படுத்தும் படங்கள் தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் வரும். இப்போது வந்துள்ள படம் வல்லதேசம்!

இந்தியாவில் இருந்து லண்டனுக்கு கணவர், மகளுடன் சுற்றுலா போகிறார் அனுஹாசன். அங்கே வைத்து அனுஹாசனின் கணவர் கொல்லப்படுகிறார். மகள் கடத்தப்படுகிறாள்.

ஏன்? எதற்காக?

இந்தியாவுக்குள் சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டு தீவிரவாதிகளை உளவறிந்து அவர்களின் முயற்சியை முறியடிப்பதற்காக இந்திய ராணுவத்தால் லண்டனுக்கு அனுப்பப் பட்டவர் அனுஹாசன் என பரபரப்பாய் விரிகிறது திரைக்கதை!

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்து வீழ்த்தும் மிடுக்கான ராணுவ வீரராக அனுஹாசன் . ராணுவ அதிகாரிக்கான தோற்ற மிடுக்கு, சிறுவயதுக் குழந்தைக்கு தாயாக கனிவு – கண்ணீர் – பச்சாதாபம், எடுத்துக் கொண்ட பணியை எதற்காகவும் விட்டுக் கொடுக்காத வீரம், சண்டை காட்சிகளில் தீப்பொறியின் சுறுசுறுப்பு என காட்சிக்கு காட்சி வேகம் தன் அசுரத் தனமான நடிப்பால் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார் அனு!

ராணுவ உயரதிகாரியாக நாசர். நாசர் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லிச் சொல்லி சலித்திருந்தாலும் அந்த மனிதர் இந்த படத்திலும் அப்படித்தான் சொல்ல வைக்கிறார்! என்ன செய்வது?

70 சதவீத படப்பிடிப்பு இங்கிலாந்தில்… லண்டனின் பேரழகு, தீவிரவாதிகளின் இருப்பிடம் ,ராணுவ விமானங்கள் பறந்து திரிவது, தீவிரவாதிகளின் நுட்பமான சதிச் செயல்கள் என காட்சிகளின் பிரமாண்டம் ஆச்சரியப்படுத்துகிறது!

கதைக்களத்தின் பெரும்பகுதி லண்டனில் என்பதால் அந்த நாட்டு நடிகர் நடிகைகள், அதற்கேற்ற காட்சியோட்டம் என சேர்ந்துகொள்ள ஹாலிவுட் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்த உணர்வு… லேசாக!

படத்தில் வரும் இன்னபிற நடிகர் நடிகைகள் எல்லோருமே நன்றாக நடித்திருந்தாலும் படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே அனுஹாசன்தான். அடுத்த ஹீரோ திரைக்கதை!

காட்சிகள் வேகம் என்றால் எல்.வி. முத்துகுமாரசாமியின் பின்னணி இசை கூடுதல் வேகம்!

இது சரியில்லை, அதை அப்படி செய்திருக்கலாம், இதை அப்படி செய்திருக்கலாம் என பட்டியலிடுவதற்கு விஷயங்கள் இல்லாமல் இல்லை. அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு,

இப்படியும் பெண் ராணுவ வீரர்கள் இருப்பார்களா? என கேட்கும் அளவுக்கு ஒரு கதையை உருவாக்கி, அதற்கு ஏற்ற நடிகர், நடிகைகள், கதைக்களம் இவற்றை கச்சிதமாக தேர்வு செய்து ஒளிப்பதிவுசெய்து இயக்கியிருப்பதற்காக இயக்குநர் என்.டி. நந்தாவுக்கு அழுத்தமான கை குலுக்கல்!

Leave a Response