35 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தமிழில் வெளியாகும் “சங்கராபரணம்”!

sankarabharanam

சுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன்  தமிழ்நாட்டிலும் அதே பெயரில் தெலுங்கு படமாக வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் “சங்கராபரணம்”. ஒரே நேரடி தெலுங்கு படம் தமிழ்நாட்டில் அள்ளிக்குவித்த வசூல் இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது.

பரத நாட்டியத்தையும் – இசையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட கதையில் வெட்டுக் குத்து,ஆபாசம் வன்முறை என கமர்ஷியல் வகையறா எதுவுமில்லாமல் உணர்வுகளை தட்டி எழுப்பி படம் பார்ப்பவர்கள் அனைவரையும் அழ வைத்தது. அதுவும் மொழி புரியாதவர்களையும் கூட  என்பது இன்னொரு விசேஷம்.

35 வருடங்களுக்கு பிறகு சங்கராபரணம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் 35mm. சினிமாஸ்கோப் ஆகவும், DTS மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சங்கராபரணம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்காக ஏராளமாக செலவழித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சோமையா ஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை – கே.வி.மகாதேவன். தமிழுக்காக புதுவடிவத்துடன் ரவிராகவ் இசையமைத்துள்ளார். வசனம் – ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன். ஒளிப்பதிவு – பாலு மகேந்திரா. இயக்கி இருப்பவர் கே.விஸ்வநாத். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

நூறாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் புகழை உலக அரங்கில் பறைசாற்றிய படங்களில் முக்கியமான படம் “சங்கராபரணம்”, தெலுங்கு மொழியில் வெளியாகி ஆந்திராவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தது.

இந்த படைப்பை உருவாக்கிய கலைமேதை கே.விஸ்வநாத் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறோம் என்ற வாசகம் கொண்ட கார்டுடன் படம் ஆரம்பிக்கிறது.