இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆகும் காலம் இது. அவ்வகையில் தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘சைவம்’. தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ‘Think big studios’ சார்பில் தயாரிக்கிறார்.
தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கி வரும் விஜய் இப்படத்தில் புதிய முயற்சியாக ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரமின் குழந்தையாக நடித்த பேபி சாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து இயக்கி வருகிறார். காரைக்குடியில் ஒரு மாதத்துக்கு மேல் முகாமிட்டு ஒரு வெற்றிபடமாக்க மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் பட குழுவினர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கின்றனர். ‘சைவம்’ என பெயரிடப்பட்டு அசைவமான சேவலை வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.



