வணக்கம் சென்னை – விமர்சனம்!!

Vanakkam-Chennai-October-11-Release-Poster

ஏற்கனவே ஒரு பிரபலம் வாய்ந்த ஒரு குடும்ப வாரிசின் தயாரிப்பாளர் அவதாரம், நாயக அவதாரம். ஆகியவற்றை தொடர்ந்து தற்போது அந்த நாயகனின் மனைவியின் இயக்குனர் அவதாரம். முன்னவர் வெற்றியை பெற்று விட்டார். பின்னவர் அந்த வெற்றியை பெற்றாரா? என்னும் ஒரு எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் எழுகிறது. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வெற்றியடைந்து அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. இந்த நிலையில் வெளியாகியுள்ள அந்த படம் தான் “வணக்கம் சென்னை”. படத்துக்கும், தலைப்புக்கும் என்ன தொடர்பு என்பதை யோசித்து மண்டையை போட்டு குடைய வேண்டாம்.

முதல் படத்தை தனுஷ் மனைவி ஐஸ்வர்யா போல மிகவும் கஷ்டப்பட்டு, ரிஸ்க் எடுத்து செய்யாமல், ஒரு காமெடி கலந்த முக்கோண காதல் கதை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. இதிலேயே அவரின் புத்திசாலிதனமான அணுகுமுறை வெளிப்படுகிறது.

படத்தின் கதை, அறிமுகமே இல்லாத இருவர் ஒரு வீட்டில் தங்க நேரிட, அவர்களுக்குள் நடக்கும் கலகலப்பான சண்டை, காமெடி, காதல் இதுதான். அதில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கபட்டிருக்கிறது. அதையும் தாண்டி காதல் வந்ததா? காதல் சேர்ந்ததா? என்பதை இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் கிருத்திகா.

நாயகனாக சிவா, மற்ற படங்களை காட்டிலும் நிச்சயமாக நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் வழக்கமான படங்களில் அவரை பார்க்கும் பீல் வருவது தவிர்க்க முடியாதது.

நாயகியாக பிரியா ஆனந்த், முந்தைய படங்களை விட இதில் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அவரும் அதை பயன்படுத்தி சிறப்பாக செய்துள்ளார். லண்டன் வாழ் தமிழ் பெண்ணாக ஏற்றுகொள்ள கூடியவர்.

வழக்கம் போல சந்தானம். ஆனால் இரண்டாவது பாதியில் தான் வருவார், கலக்குவார் என அவருக்கு ஏக பில்டப் கொடுக்கபட்டிருந்தது. ஆனால் நாயகனுக்கு காதல் யோசனைகளை சொல்லவே வந்து போகிறார்.

இவர்களை தவிர இரண்டாவது நாயகனாக ராகுல் ரவீந்திரன், லண்டன் மாப்பிள்ளையாக வந்து போகிறார். ப்ளாக் பாண்டி, ஊர்வசி, ரேணுகா என நட்சத்திரங்களும் நிறையவே உண்டு.

படத்தின் பெரிய பலம் இசை. அனிருத் இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர். பின்னணி இசையும் நின்று ஒலிக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் தான் படத்தை தாங்கி பிடிக்கிறது என்றால் மிகையாகாது. ரிச்சர்ட் M.நாதன் ஒளிப்பதிவு. லண்டன், சென்னை, தேனி என அனைத்தையும் அழகாகவே காட்டியிருக்கிறார்.

படத்தின் கதை புதிதாக ஒன்றுமில்லை, என்றாலும் அதை காட்டியிருக்கும் விதத்தில் ரசிகர்களை பார்க்கும்படி செய்கிறார் புதுமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி. ஆனால் படத்தின் நீளம் தான் கொஞ்சம் தலையை சொரிய வைக்கிறது. படத்தின் முடிவில் வந்து ஒரு சிறப்பு தோற்றத்தில் தலையை காட்டிவிட்டு போகிறார் ஒரு இளம் நாயகன். அவர்???