சபாபதி – திரை விமர்சனம்

கதை – திக்குவாயால் வாழ்வில் பல வலிகளை அனுபவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்வில் விதி ஒரு விளையாட்டு விளையாடுகிறது. அந்த விளையாட்டால் அவன் அனுபவிக்கும் பிரச்சனைகளும், அதிலிருந்து அவன் வெளிவருவதும் தான் கதை.

உடல்குறைபாடுகளை காமெடி செய்கிறார் என சந்தானத்தின் மீது விமர்சனம் விழ, இப்போது அவரே திக்குவாய் பாத்திரத்தில் நடித்து அதற்கு பரிகாரம் செய்திருக்கும் படம் தான் “சபாபதி”.

திக்குவாய் சந்தானம் எதிர்வீட்டு சாவித்திரியை சிறுவயது முதலே காதலிக்கிறார். ஆனால் அவரது திக்குவாய் அவரது தந்தையிடத்தில் திட்டு வாங்கி தருகிறது. காதலி வீட்டிலும் கெட்ட பெயர் வாங்கி தருகிறது. சமூகத்திலும் அவருக்கு மதிப்பு இருப்பதில்லை. இதற்கிடையில் விதியால் அவருக்கு ஒரு பணப்பெட்டி கிடைக்க அதனால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது.

விதி ஒரு பாத்திரமாக கதைக்குள் வருவதும், வழக்கமாக கவுண்டர் காமெடி அடிக்கும் சந்தானம் இதில் திக்குவாயாக நடித்திருப்பதும் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. மாற்றுத்திறனாளிகளால் எதுவும் முடியும் என்ற கருத்தை இறுதியில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

விதி தான் இந்தப்படத்தின் கதையை மாற்றப்போகிறது என முதலில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணப்பெட்டியை போடுவதை தவிர வேறெதையும் செய்யாதது சோகம். ஆரம்ப கட்ட காட்சிகள் கொஞ்சம் போர் ஆனால் கதைக்குள் நுழைந்த பிறகு படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது

திக்குவாயாக அப்பாவி சந்தானம், கவுண்டர் காமெடி அடிக்க முடியாமல் திணறினாலும், காதல் மயக்கத்தில் திரிவதும், அப்பா எம் எஸ் பாஸ்கரிடம் சேட்டை செய்யும் இடங்களிலும் கலக்குகிறார். அவரும் எம் எஸ் பாஸ்கரும் வரும் காட்சிகள் அனைத்துமே பட்டாசு. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

எம் எஸ் பாஸ்கர் மொத்த படத்தின் நகைச்சுவைக்கும் தானே பொறுப்பெடுத்து கொண்டு பின்னியெடுத்திருக்கிறார். அப்பாவாக அவர் உடல்மொழியும், சந்தானத்துடன் மல்லுகட்டி தன்னைதானே நொந்து கொள்ளும் காட்சிகள் சிரிப்புமழை.

எதிர்வீட்டுப் பெண்ணாக வரும் நாயகிக்கு பெரிய அளவில் பாத்திரமில்லை. இடைவேளையின் போது காணமல் போனவர் க்ளைமாக்சில் தான் வருகிறார். புகழ் ஊறுகாயக வந்து போகிறார். படத்தில் ஜொலிப்பது சந்தானமும் எம் எஸ் பாஸ்கரும் மட்டுமே. படத்திம் கண்டினுட்டி, லாஜிக்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வில்லனாக ஷயாஜி ஷிண்டே படத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இசை படத்திற்கு தேவையானதை தந்திருக்கிறது பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஒளிப்பதிவு பாடல்களின் போதும் மட்டும் கவர்கிறது.

காதலியின் அம்மாவை டிக்கியில் உதைக்கும் காமெடி, அப்பாவின் வாயில் யூரின் போவது போலான நாராசங்கள் அவசியம் தானா? அதை தவிர்த்திருக்கலாம்.

சந்தானம் படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அது படத்தில் கச்சிதமாக வந்திருக்கிறது. சந்தானம் உடல்மொழியாலும் தன்னால் சிரிக்க வைக்க முடியுமென்று நிரூபித்திருக்கிறார். சபாபதி வயிறுகுலுங்க சிரித்து விட்டு வரலாம்.

Leave a Response