காலேஜ்-ல நிறைய ‘கட்’ அடிச்சேன் – விஷால்!!

Vishal

நடிகர் விஷால் தனது சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து நடிக்கும் படம், ‘பாண்டிய நாடு.’ இந்த படத்தில் இடம்பெறும் ‘‘ஒத்தக்கடை ஒத்தக்கடை மச்சான்’’ என்ற பாடலை, சென்னை லயோலா கல்லூரியின் ஆண்டு விழாவில், கல்லூரி முதல்வர் ஜோஸ் சுவாமிநாதன் வெளியிட்டார். விஷால் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டார்கள்.

விழாவில் விஷால் பேசும்போது, ‘‘நான் இந்த விழாவில் தமிழில் தான் பேசப்போகிறேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேச வராது. இந்த கல்லூரி விழாவில் பாடல் வெளியிடுவதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு மேடையில் நடனம் ஆடுவது என்றால் பயம். ஒருமுறை நான் இங்கு மேடை ஏறியபோது, மின்சார தடை ஏற்பட்டது. அதை வேண்டும் என்றே நான் செய்தது போல் பேசினார்கள். மின்சார தடை ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

நான், இதே லயோலா கல்லூரியில் தான் படித்தேன். முதல் ஆண்டு படிக்கும்போது, நிறைய நாட்கள் வகுப்புகளுக்கு ‘கட்’ அடித்து இருக்கிறேன். இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, சில நாட்கள் ‘கட்’ அடித்தேன். அதன்பிறகு கல்லூரி என்னை மாற்றி விட்டது. வெறும் பாடத்தை மட்டும் படிக்காமல், வாழ்க்கையை இங்கேதான் கற்றுக் கொண்டேன். எனக்கு சோர்வோ, களைப்போ வரும்போது இந்த கல்லூரிக்குள் வந்து அங்கும் இங்கும் சுற்றுவேன். யாருக்கும் தெரியாமல் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு போவேன். சக்தியும், உற்சாகமும் வந்து விடும். அப்போதுதான் உதவி இயக்குனராக சேர்ந்து இயக்குனர் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று ஒரு விருந்தினராக உள்ளே நுழைந்தது பெருமையாக இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் டைரக்டர் சுசீந்திரன், நடிகை லட்சுமிமேனன், இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.