இயக்கம்- சுசீந்திரன்
நடிகர்கள் – ஜெய், மீனாக்ஷி, பாலசரவணன்
அரிவாளை தூக்கிக் கொண்டு பழிவாங்கும் இரண்டு கூட்டத்திற்குள் நுழையும் ஹீரோ என்ன செய்கிறான் என்பது தான் “வீரபாண்டியபுரம்”.
சுசீந்திரன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய படங்கள் தந்தவர், இப்போது லெஃப்ட் கியர் போட்டு அதள பாதாளத்தில் பயணித்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து தோல்வி படங்களை தந்துவருவதால் தன் பாணி பழி வாங்கும் கதையை மீண்டும் தொட்டிருக்கிறார்.
ஒரு அழகான கிராமம் இரண்டு கும்பல் பழிவாங்கும் நோக்கில் எந்நேரமும் அருவாளோடு திரிகிறார்கள். அதில் ஒரு கூட்டத்தின் தலைவருடைய பெண்ணை காதலித்து மாப்பிள்ளையாக நுழைகிறார் ஜெய். அவர் உயிருக்கும் ஆபத்து எனும் நிலையில் என்ன நடக்கிறது என்பது தான் படம்
படு மோசமான 80ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட காதல் கதை, அதை விட பழைய திரைக்கதை, அதை விட மோசமான இயக்கம், திடீர் திடீரென வரும் பாட்டு, ஃபைட்டு என படம் நம் பொறுமையை சோதிக்கிறது.
ஜெய் இதில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் மோசமில்லை. அவர் இன்னும் முயன்று கொஞ்சம் இசை பக்கம் திரும்பலாம் நடிப்பு ஒரே மாதிரி இருப்பது போல் இசை இல்லாமல் இருக்கிறது. அதுவே நலம் தானே.
பாலசரவணன் படத்தை பல இடங்களில் ஏதோ பஞ்ச் அடித்து காப்பாற்றுகிறார். நாயகி மீனாக்ஷி ஹீரோயினுக்கு டூப் போட்டது போலவே இருக்கிறார். தந்தையே செத்தாலும் ஜாலியாக திரிகிறார்.
படத்தில் வழக்கமாக சுசீந்திரன் படங்களில் வரும் அனைத்து நடிகர்களும் தலை காட்டுகிறார்கள். ஆனால் யாருமே ஈர்க்கவில்லை. எல்லோரும் எந்நேரமும் அருவாவோடு ரத்தம் பார்க்க சுத்திக்கொண்டு இருக்கிறார்கள் நமக்கும் வெட்டு விழும் போல் தெரிகிறது.
ஒளிப்பதிவு சுமார். பின்னணி இசை பரவாயில்லை ரகம். படம் முழுக்க எல்லோரும் யாரையாவது நினைத்து கொண்டு பழிவாங்க அருவாவை தூக்கி கொண்டு ஓடுகிறார்கள். தேசிய விருது வரை சென்ற இயக்குநர் ஏனோ பாவம், கொஞ்சம் ரசிகனை நினைத்து பார்த்து படமெடுத்திருக்கலாம்.