கார்த்தி இப்போது வட சென்னையின் வாலிபர்!

IMG_2887

“காளி” ஸ்டூடியோகிரீனில் தயாரிப்பில் அட்டகத்தி இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கார்த்தி அடுத்த நடிக்கவிருக்கும் அட்டகாசமான திரைப்படம்.

பருத்தி வீரன் துவங்கி தங்களது தரமான படைப்புகளால், ரசிகர்களின் பேராதரவை பெற்று தொடர் வெற்றிகளை குவித்து கொண்டிருக்கிறது K.E. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.  இதன் அடுத்தடுத்த படைப்புகளாக தீபாவளிக்கு “ஆல் இன் ஆல் அழகு ராஜா”வும் பொங்கலுக்கு “பிரியாணி”யும் வெளிவர உள்ளன.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அடுத்த புதிய படத்தை இப்போது அறிவித்துள்ளது.படத்தின் பெயர் “காளி” இயக்கம் பா.ரஞ்சித்.       கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இதில் அவர் வடசென்னை வாலிபராக நடிக்கிறார். நாயகி கத்ரினா தெரேசா. இவர் தெலுங்கில் அறிமுகமாகி “இத்ரம்மாயிலத்தோ” வெற்றிப்படத்தில் நடித்தவர்.

மேலும் நாசர்,பாலாசிங், ரமா போன்ற பிரபலங்கள் மட்டுமல்ல பல புதுமுகங்களும் நடிக்கிறார்கள். அறிமுகமாகும் புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி ஒரு மாதமாக அளிக்கப்பட்டு வருகிறது.

“அட்டகத்தி” படத்தின் மூலம் சென்னை புறநகர் வாசிகளின் புகை படிந்த வாழ்க்கையை, இளைஞர்களின் காதலை வெளிச்சம் போட்டுக் காட்டிய பா.ரஞ்சித், “காளி” படத்தின் மூலம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை திரையில் காட்டவுள்ளார்.

“வடசென்னை என்றதுமே பழுப்பேறிய கட்டடங்கள், அழுக்கு மனிதர்கள், வன்முறை தோய்ந்த வாழ்க்கை போன்றவைதான் இதுவரை படங்களில் காட்டப்பட்டு வந்துள்ளன. அவை யாவும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள்என்றுதான் சொல்ல வேண்டும்.

வடசென்னை மக்களின் வாழ்க்கையில் உள்ள வீரம்,ஈரம்,பாசம்,காதல் இதுவரை தமிழ் சினிமா காட்டியது போலிருக்காது. நான் இப்படத்தில் வடசென்னை மக்களின் வியர்வை தெறிக்கும் உழைப்பை,  மயிலிறகு மனசை,பச்சையம் மாறாத பாசத்தை, கட்டுக்கடங்காத கலைரசனையை கனவு பொங்கும் காதலை அப்படியே நிஜமாக சொல்ல இருக்கிறேன். நான் அம்மக்களிடம் கண்டு ரசித்தவை வியந்தவை ஏராளம்.

தெருவுக்கு ஒரு இசைக்குழு,வீதிக்கு வீதி விளையாட்டு குழு,வாத்தியக் குழுஇருக்கும் என நாலு தெருவுக்குள் நிச்சயம் ஒரு நடனக் குழுவாவது இருக்கும்.

விளையாட்டு,இசைக்கச்சேரி, நடனம், வீரக்கலை என எதுவாக இருந்தாலும் முழு மூச்சாக இருந்து மூர்க்கமான ஊக்கத்துடன் கற்றுக் கொள்ளும் இளைஞர்களின் ஆர்வம் நம்மை வியப்பூட்டும். பெரும்பாலும் இவர்கள் யாருக்கும் குருநாதர்களே கிடையாது. அவ்வளவு கலைகளையும் தங்கள் முயற்சியின் மூலமே கற்றுக் கொள்வார்கள்.

அப்படி ஒரு வடசென்னை வாலிபன் தான் காளி. அவன் படித்த இளைஞன், பாசக்கார கலைஞன், பல கலைகளின் ரசிகன். அவனும், அவன் குடும்பமும், அவன் சார்ந்த மக்களும், அவர்களின் கொண்டாட்டமும் குதூகலமும் தான் “காளி” திரைப்படம்.

பெரம்பூரில் தொடங்கும் இப்படம் வடசென்னையின் வார்த்தெடுப்பாக வண்ண திரையில் விரியும் என்று சொல்கிறார் கதை திரைகதை எழுதி இயக்கும்பா.ரஞ்சித். இவர் சென்னை 28ல் முதல் வெங்கட் பிரபுவிடம் சினிமா கற்றவர்.

“காளி” படத்துக்கு ஒளிப்பதிவு முரளி.ஜி இவர் புனே திரைப்படக் கலூரியில் படித்த போதே தேசிய விருது வென்றவர். தெலுங்கில் “அந்தாலராட்சசி” படத்தில் பணியாற்றியுள்ளார். இசை – சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு- ப்ரவீன் ஸ்ரீகாந்த், இவரும் தேசிய விருது பெற்றவர். கலை-T.ராமலிங்கம்,ஸ்டன்ட்-அன்பறிவு, இவர் பெப்சி விஜயனின் மாணவர். பாடல்கள் – கபிலன், கானா பாலா, நடனம்- ஷெரிப்.