மூடர் கூடம் – விமர்சனம்!

Moodar-koodam-4

மூடர் கூடம் தலைப்பே வித்தியாசமாக தூய தமிழில் இருக்கிறது, ஆக படத்தில் நிச்சயம் புதுப்புது விஷயங்கள் இருக்கும் என்று தியேட்டரில் போய் அமர்ந்தால் ஒரு பொழுதுபோக்கு படம் நிச்சயம்.

யாரும் இல்லாமல் சென்னைக்கு வேலை தேடி வரும் இளைஞன், கஞ்சா விற்கும் ஒருவன், முட்டாள் என்ற வார்த்தைகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் என சுயமாக சிந்திக்கத் தெரியாத 3 பேர். இவர்களுடன் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் படித்ததால் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காமல் அலையும் ஒருவர். இந்த 4 பேரும் ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் சந்தித்து கொள்கிறார்கள்.

சாப்பாட்டுக்கே வழியில்லாத இவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் ரூபாய் ஐநூறு கொடுத்து நான்கு பேரையும் பிரித்து எடுத்துக் கொள்ளும்படி சொல்கிறார். அங்கிருந்து இவர்கள் கூட்டணி தொடர்கிறது. வயிற்று பிழைப்பிற்கு என்ன செய்வதென்றே தெரியாத இவர்கள், கூட்டணியில் ஒருவரான வெள்ளியின் மாமா பக்தவச்சலம் வீட்டுக்கு கொள்ளை அடிக்க செல்கிறார்கள்.

அங்கு அவரோ சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் செல்ல தயாராக இருக்கிறார். அங்கு செல்லும் வெள்ளை மற்றும் அவரது கூட்டாளிகளான நவீன், குபேரன், சென்ட்ராயன் ஆகியோர் பக்தவச்சலம் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களது திட்டத்தில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா என்பது மீதிக்கதை.

படத்தில் நாயகன் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இதில் நவீன் படித்தவன் என்பதை மற்ற 3 பேருக்கும் அறிவுரை கூறும்போதும் தன் செயலிலும் காண்பிக்கும் காட்சிகள் அழகு.

சென்ட்ராயன் படம் முழுக்க சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் முகபாவனை மற்றும் பேச்சு ஆகியவற்றால் தன் கதாபாத்திரத்தில் பலிச்சிடுகிறார்.

குபேரன் அடர்ந்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் இருந்தாலும் இவர் செய்யும் செயல்கள் அனைத்தும் சிரிப்பை ஏற்படுத்துகிறது. வெள்ளை என்ற அப்பாவியான தோற்றத்தில் அழகாய் நடித்திருக்கிறார் ராஜாஜ்.

படத்தில் வரும் ஜெயபிரகாஷ், ஓவியா, அனுபமா, ஜெயபிரகாஷின் இளைய மகள், பொம்மை திருடன், ஜெயபிரகாஷின் மகனாக வரும் சிறுவன், ஜெயபிராகாஷ் உடன் போனில் பேசும் குழநதை ஆகிய அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாய் செய்திருக்கிறார்கள். படத்தில் புதுசு புதுசாக அறிமுகம் ஆகும் அனைத்து கதாபத்திரங்களுமே ரசிக்க வைக்கின்றன.

நடராஜன் சங்கரனின் இசையில் பாடல்களும் பரவாயில்லை. பின்னணி இசை படத்திற்கு வலுவூட்டுகிறது. இயக்குனர் நவீன் குறைந்த நட்சத்திரங்களை கொண்டு ஒரே அறையில் பெரும்பான்மையான காட்சிகளை இயக்கி இருக்கிறார். இருப்பினும் காட்சிகளை திறம்பட நகர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது.