கேயாரின் முறைகேடான வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் – கலைப்புலி தாணு!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த தேர்தலில் முறைகேடு நடக்கக்கூடாது என்பதற்காக இரண்டு ஓய்வு பெற்ற நீதியரசர்கள் திருமிகு எஸ்.ஜெகதீஸ்வரன் அவர்கள் திருமிகு.கே வெங்கட்ராம் அவர்கள் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. ஆனால் முறைகேடு நடந்திருக்கிறது. ஜனநாயகத்தையே கேவலப்படுத்தும் வண்ணம் இரண்டு நீதியரசர்களும் நடந்து கொண்டார்கள். சத்தியம் ஜெயிக்க வேண்டும், உண்மை உயர வேண்டும் நன்மை பயக்க வேண்டும். என்பதால் தான் நான் இதைச் சொல்கிறேன்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே தலைவராக போட்டியிடும் கேயார் என்கிற கோதண்டராமைய்யா அவர்கள் வேற்றுமொழிப்படத்தை டப்பிங் செய்து தமிழில் நேரடியாக எடுத்த படம் என்று சர்டிஃபிகேட் வாங்கி தேர்தலில் நிற்கிறார் என்கிற விபரத்தை தேர்தலை நடத்தும் இரண்டு நீதியரசர்களிடமும் சொன்னோம். அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.

தேர்தல் விதி 20-இன் படி 2 நீதியரசர்கள் கையொப்பமிட்ட விதிகளின் படி கேயார் அணியினர் தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள் என்று அந்த இரண்டு நீதியரசர்களிடமும் சொன்னோம். நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதிமொழி தந்தார்கள், ஆனால் அதன்படி நடக்கவில்லை.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் முறைப்படி அனைத்து வாக்குப்பதிவு எண்ணிக்கையை கேமரா பொருத்தி போட்டியிட்டவர்களின் முன்னிலையில் எண்ணுவதை வீடியோ மூலம் எல்லோருக்கும் தெரிவித்திருக்க வேண்டும். கடந்த முறை தேர்தலில் கூட அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. மாறாக தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் எல்லோரையும் நீதியரசர்கள் வெளியே அனுப்பி விட்டனர். உள்ளே கூப்பிடுவார்கள் என்று ஒன்றரை மணி நேரம் காத்திருந்தோம் ஆனால் உள்ளே அழைக்கவில்லை.

ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட என்னையும் கேயாரையும் அழைத்தார்கள். உள்ளே சென்றவுடன் ஒரு டிவி மானிட்டரை காண்பித்து கேயார் ஜெயித்து விட்டார். நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள் என்று ஜனநாயக முறைப்படி வெற்றியை அறிவிக்காமல் மோசடியாக அறிவித்து விட்டார்கள்.

எனக்கு நேர்ந்த இந்த அவலம் தான் என்னுடன் போட்டியிட்ட எல்லோருக்கும் நடந்தது. இரண்டு நீதியரசர்களின் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கது. இப்படிப்பட்ட நீதியரசர்களை தண்டிக்க வேண்டும்.

இதனால் கேயாரின் இந்த முறைகேடான வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். எங்கள் நோக்கம் கோயில் மாதிரி இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை முடக்குவதல்ல, உண்மை வெல்ல வேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும். அதனால் இந்த விஷயத்தில் உண்மை வெல்வதற்காக நாங்கள் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.