திரைப்பட வெளியீட்டு கமிட்டியை தயாரிப்பாளர் சங்கம் மட்டுமே நிர்வகிப்பது சரியா?

எப்போது திரைப்படம் டிஜிட்டல் மயமானதோ அப்போதே திரைப்பட தயாரிப்பு சுலபம் ஆகிவிட்டது. ஆனால் படங்களின் வெளியீட்டில் தான் பெரும் சிக்கல். இந்த நிலையில் டிஜிட்டல் படப்பிடிப்பு வந்த நாள் முதல் திரைத்துறையில் ஆரம்பித்தது மறைமுக சிக்கல் என்றே சொல்லலாம்.

அந்த வரிசையில் நல்ல கதை அம்சத்துடனும், நல்ல தொழில் நுட்பத்துடனும் வந்தவர்கள் சிலரே, டிஜிட்டல் வந்த முதல் சில வருடங்களே. “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்பதை போல, கொஞ்சம் கற்பனை திறன் உள்ளர் எல்லாம் நானும் படம் எடுக்குறேன் என்று களம் இறங்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தமிழ் சினிமாவுக்கு வர ஆரம்பித்தவுடன் ஆரம்பித்தது இந்த சிக்கல்.

நானும் படம்மெடுக்கிறேன் என்று பலர் கிளம்பிய நிலையில், பெரும்பாலானோர் படப்பிடிப்பை முடித்து, திரைப்படத்தை வெளியீட்டுக்கு தயார் செய்து வைத்தனர். ஆனால் சில பேர் தன் படங்கள் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் என நம்பினர். இந்த இயக்குநர்களில் சிலர் அவர்கள் படங்களுக்கு தயாரிப்பாளர்களாகவே இருந்தனர்.

இப்போது தான் ஆரம்பித்தது சிக்கல்! எல்லாமே படம் வெளியீட்டில் தான். டிஜிட்டல் படங்களில் ஒரு சில படங்களே தரமானவையாகவும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறக்கூடிய படங்களாக இருந்தன. அப்போது தான் பல படங்கள் கிடப்பில் போடப்பட்டன. அந்த கிடப்பில் போடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் படங்களை வெளியிட முடியவில்லையே, பணம் லாக் ஆகிவிட்டதே என புலம்ப ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ சார்பாக சில மாதங்களுக்கு முன்பாக ‘ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ என்று ஒரு குழுவை உருவாக்கினார்கள். ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ சார்பாக தயாரிக்கப்படும் படங்கள் திரையரங்கில் வெளியிடுவது என்றால் அந்த ‘ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ ஒப்புதல் வாங்கிய பிறகே வெளியிட முடியும் என்று கூறப்பட்டது.

அந்த கமிட்டி கட்டளையை ஒரு சிலரே மதிக்கும் அளவுக்கும் ஆனது, காரணம் என்னவென்றால் அந்த கமிட்டி ஒப்புதல் கொடுத்தாலும், திரையரங்குகள் மனசு வைத்து இடம் கொடுத்தால் தான் அந்த படங்கள் வெளியாகும் நிலை ஏற்பட்டது. இந்த சிக்கலில் பெரியதாக பாதிக்கப்பட்டது சிறிய பட்ஜெட் படங்கள் தான்.சிறிய பட்ஜெட் படங்களில், சிறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட நல்ல தரமுள்ள படங்களும், பிரபல தயாரிப்பாளர்களின் சுமார் ரக சிறு பட்ஜெட் படங்களும் அடங்கும். திரையரங்கு உரிமையாளர்கள் அந்த நல்ல சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத் துவம் கொடுப்பதைவிட, பிரபல தயாரிப்பாளரின் சிறு பட்ஜெட் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால் நல்ல தரமான நிறைய சிறு பட்ஜெட் படங்கள் வந்த இடம் தெரியாமல் காணாமல் சென்றுவிட்டன.

சில நேரங்களில் பெரிய பட்ஜெட் படங்களுடன் சிறு பட்ஜெட் படங்களும் வருவதுண்டு. அப்போது பெரிய பட்ஜெட் படம் சுமாராக இருந்து, சிறிய பட்ஜெட் படம் தரமாக இருந்தாலும் அந்த சிறிய படம் வெற்றி பெறுவதில் பெரும் சிக்கல் தான். இதை பற்றி திரையரங்கு உரிமையாளர்களையோ, விநியோகஸ்தர்களையோ கேட்டால், படத்தில் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லை என்று சொல்லுவார்கள். இதற்க்கு முழு காரணம் என்னவென்றால், தரமற்ற பல சிறு படங்களுடன் தரமான ஒரு சில நல்ல சிறு பட்ஜெட் படங்கள் வருவது தான்.

‘ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ ஒப்புதல் வாங்கி வெளியிட முடியாத தயாரிப்பாளர்கள் இப்போது தான் தயாரிப்பாளர் சங்கத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்கிறார்கள், காரணம் அவர்கள் கைவசம் தான் இந்த ‘ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ இருக்கிறது. படத்தை தயாரிப்பது தயாரிப்பாளர்களா இருக்கலாம் ஆனால் அந்த படங்களை திரையரங்குகளில் திரையிடலாமா? வேண்டாமா?? என்பதை அந்த திரையரங்கு உரிமையாளர்கள் தான் முடிவு செய்வார்கள். சிறு பட்ஜெட் படத்திற்கு சரியான வசூல் இல்லையென்றால், திரையரங்கு நஷ்டத்தை யார் சரி செய்வார்கள் என்பது தான் அவர்கள் கேள்வி. அப்படி இருக்க அந்த திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதை தவறு என்றும் யாரும் சொல்லுவது சரியல்ல என்றும்.

சரி இதெல்லாம் போகட்டும், நல்ல தரமான சிறு பட்ஜெட் படங்கள் வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறதே என்று தானே நீங்கள் யோசிக்கிறீர்கள். ஆம் ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ உருவாகிக்கிருக்கும் ‘ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி’ உறுப்பினர்கள் அனைவரும் தயாரிப்பாளர்களே. இதில் தான் சற்றும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது இந்த கட்டுரை ஆசிரியரின் ஆலோசனை.

திரையரங்கு உரிமையாளர்களில் சங்கங்களில் இருந்து நான்கு நபர், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ சார்பில் நான்கு நபர், ‘தென்னிந்தியா திரைப்பட தயாரிப்பாளர்கள் கில்டு’ சார்பாக நான்கு நபர், ‘விநியோகஸ்தர்கள் சம்மேளனம் ‘ சார்பாக நான்கு நபர் என ஒரு புது கமிட்டி அமைத்து அதன் மூலமாக திரைப்பட வெளியீட்டினை நியாயம் செய்தால் திரைப்பட தயாரிப்பிலும் தரம் இருக்கும், திரைப்பட வெளியீட்டிலும் சிக்கல் இருக்காது. இந்த ஆலோசனையை திரைத்துறையினர் சற்று யோசித்து செயல்பட்டால் தமிழ் திரைப்பட வியாபாரத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.

Leave a Response