இந்திய சினிமா நூற்றாண்டு: சென்னையில் நான்கு நாட்கள் விழா!!

இந்தியாவில் முதல் சினிமா ராஜா அரிச்சந்திரா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டு (2013) இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், சினிமா நூற்றாண்டு விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 21-ந் தேதி, முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார்.

இது குறித்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் கூறுகையில், “இந்திய சினிமா நூற்றாண்டு விழா, செப்டம்பர் 21-ந் தேதியில் இருந்து 24-ந் தேதி வரை, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொறுப்பேற்று நடத்துகிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை, இதுபோன்ற மாபெரும் விழா நடத்தும் முயற்சி, முதல்வர் ஜெயலலிதாவின் முழு ஒத்துழைப்பு மூலமாக மட்டுமே சாத்தியமானது.

செப்டம்பர் 21-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து 22-ந் தேதி காலை கன்னட சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி காலை மலையாள சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

அனைத்து இந்திய சினிமா உலகினரும் பங்கு பெறும் நிறைவு நாள் உச்சகட்ட நிகழ்ச்சி 24-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்கள். கவுரவ விருந்தினராக தமிழக கவர்னர் கே.ரோசய்யா பங்கேற்கிறார்.

விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து பல அமைச்சர்களும் ரஜினி – கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள்.

நிறைவு நாள் உச்சக்கட்ட நிகழ்ச்சியில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்கிறார். அவருடன் வட இந்திய நடிகர்-நடிகைகள் பலரும் பங்கேற்கிறார்கள். சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொதுப் பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.

சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொது மக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது. சென்னை நகரமே விழாக் கோலம் பூணும்படி, நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.

செப்டம்பர் 24-ந் தேதி சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும்.

தென்னிந்திய சினிமா சங்கங்கள், குறிப்பாக தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழாடு இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கத்தினர் அனைவரும் உரிய பங்களிப்பை அளிக்க முன்வந்து இருக்கிறார்கள்.

18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற ஆதரவும், முழு ஒத்துழைப்பும் கொடுத்து, தாய் அன்போடு உதவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.