தள்ளிபோகிறது தலைவா! குழப்பத்தில் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள்!

Thalaivaa-Stills13

தலைவா படம் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார். ஆனால் அதற்குள் வரிவிலக்கு பிரச்சினை என்ற பெயரில் ஒரு பிரச்சினை ‘விஸ்வரூபம்’ எடுக்க தற்போது படம் வெளியாகுமா அல்லது வெளியாகாதா? என குழப்பம் நிலவுகிறது.

இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம் சேம்பரில் நடந்தது. தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் பங்கேற்றனர். நள்ளிரவு வரை கூட்டம் காரசாராக நடந்தது.

தலைவா படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி இன்று போர் மதியம் பிரேம்ஸ் திரையரங்கில் அரசு அதிகாரிகளும், ஆர்.வி.உதயகுமார், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட வரிவிலக்கு பரிந்துரைக் குழுவினரும் படம் பார்த்தனர்.

வரி விலக்குச் சான்றிதழ் நகல் அளிக்கப்பட்டால் மட்டுமே படத்தைத் திரையிட முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். இன்று இரவுக்குள் எப்படியும் வரி விலக்கு சான்றிதழ் கிடைத்துவிடும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதி தரப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படாததால் படம் தள்ளிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே சுமுக உறவு ஏற்படும் வரை படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கும்.

ஆக நாளை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தலைவா வெளியாகிறது. துபாய் மற்றும் கனடாவில் ஏற்கனவே படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது விடிவதற்குள் பிரச்சினை தீர்ந்துவிடாதா என்ற யோசனை, வருத்தம் மற்றும் குழப்பத்தில் உள்ளனர் பல திரையரங்குக உரிமையாளர்களும், ரசிகர்களும்.