“கொள்ளையோ கொள்ளை” என அமைச்சர் உதயநிதியை நேரடியாக குற்றம்சாட்டும் பா.ஜ.க தலைவர்

வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழில் இரண்டு முக்கிய திரை நட்சத்திரங்களான அஜீத் மற்றும் விஜய் நடித்துள்ள திரைப்படங்கள் வெளியாகின்றன. ஜனவரி 11 அன்று நடிகர் அஜித்தின் “துணிவு” மற்றும் விஜயின் “வாரிசு” திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரு பெரும் நடிகர்களின் திரைப்படங்களை காண அவர்களுடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள். தொண்டர்கள் மீது எப்படி அரசியல் தலைவர்கள் சவாரி செய்வார்களோ அதை போலவே, நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் மீது சவாரி செய்வது வழக்கம். இதை பயன்படுத்தி திரைத்துறையில் ஆதாயம் பாற்பது திரைப்பட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தான் என்பது பலரின் குமுறல்.

இந்த பொங்கல் திருநாள் விடுமுறை நாட்களில் வெளியாகும் அஜித்தின் “துணிவு” மற்றும் விஜயின் “வாரிசு” திரைப்படங்களின் காட்சிகள் 11 ஜனவரி 2023 அன்று அதிகாலை 01:00 மணிக்கு துவங்குகிறது. இந்த திரைப்படங்களின் முன்பதிவு நேற்று பிற்பகல் துவங்கி சில மணி நேரங்களிலேயே முடிவுற்றது. இந்த இரண்டு திரைப்படங்களின் முன்பதிவு டிக்கட் விலை திரையரங்குகளில், ஒரு டிக்கட்டின் குறைந்த விலை ரூபாய் ஆயிரம் என விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த விஷயம் அறிந்த பல எதிர்க்கட்சி தலைவர்கள் மவுனம் காத்த நிலையில், தமிழக பா.ஜ.க’வின் துணை தலைவர் நாரயானன் திருப்பதி ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாரயானன் திருப்பதி தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள படங்களின் டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய்.1000 முதல் ரூபாய் 3000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த சட்ட விதி மீறல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டுமொத்த அமைப்பை முடக்குவதோடு, திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது. சூதை ஒழிக்கப்போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை நட்டநடு நிசி 1 மணிக்கு படங்களை திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே, இந்த படங்களின் விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது. பல்வேறு விவகாரங்களை தானாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில தி மு க அரசை கண்டிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும்.” என நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response