சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர், விசாரணையின்போது போலீஸ் அடித்ததில் பரிதபமாக உயிரிழந்தார். விசாரணையின் போது கைதி உயிரிழந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இளைஞர் அஜித் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அஜித்குமார் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அப்போது அஜித்குமாரின் தாய், முதல்வரிடம் தனது மகனுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொன்று விட்டனர் என கதறி அழுதார். அதற்கு முதல்வர் திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு.கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் எனக் கூறினார். முதல்வருடனான உரையாடல் தொடர்பாக கருத்து கூறியுள்ள அஜித்தின் தாய், “முதல்வர் எங்களிடம் வருத்தம் தெரிவித்தார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்” என்றார்.



