திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான கனவுகளும் எண்ணங்களும் இருக்கும். தங்களுடைய திருமணம் எப்படி எல்லாம் நடைபெற வேண்டும் என அதற்கான வயது வரும்போது திட்டமிட்டுக்கொண்டே வருவார்கள். சில திருமணம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவும், சிலர் திருமணம் எதிர்பாராத ட்விஸ்ட் ஆகவும் அமையும். அப்படி ஒரு கல்யாணம் தான் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று உள்ளது.
திருத்தணியில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றுள்ள நிலையில் அங்கு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இப்படியான நிலையில் இன்று காலை மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மணக்கோலத்தில் ஒரு இளம் ஜோடி அவசர அவசரமாக ஓடி வந்து திடீரென மாலை மாற்றிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண் கழுத்தில் இளைஞர் தாலி கட்ட சென்றுள்ளார். என்ன நடக்கிறது என சுற்றி இருந்த பொதுமக்கள் குழப்பம் அடைந்த நிலையில். தாலி கட்ட மாப்பிள்ளை தயாரான சமயத்தில் சினிமா பாணியில் பெண் மற்றும் மாப்பிள்ளை குடும்பத்தினர் அங்கு வந்தனர்.
இதனால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது. மணக்கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது குடும்பத்தினர் அந்த இளைஞரை நோக்கி, “எங்களது மகளை கடத்தி வந்து கட்டாயத் திருமணம் செய்ய பார்க்கிறாயா?” என கூச்சலிட்டனர். மேலும் அங்கிருந்து தங்கள் வீட்டு பெண்ணை அழைத்துச் செல்லவும் முயற்சி செய்தனர். ஆனால் இதனை மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர்கள் தடுத்ததால் இரு வீட்டருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இரு குடும்பத்தினரும் ஒரு பக்கமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில் சைடு கேப்பில் மாப்பிள்ளை மணப்பெண் கழுத்தில் தாலி கட்டினார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் பதட்டூட்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதியும், பொம்மராஜூ பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டாவும் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த நிலையில் காதலித்தது தெரிய வந்தது. ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் திருத்தணி கோயில் சன்னதியில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். சட்டப்படி இருவரும் மேஜர் என்பதால் இரு வீட்டாரையும் சமாதானம் செய்த போலீசார் மணமக்களுக்கு அறிவுரைகளை சொல்லி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



