மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதிகளை மூன்றாக பிரித்து தி.மு.க.,வில் மூன்று மாவட்ட செயலாளர்கள் கட்சிப் பணிகள் செய்கின்றனர்.
இதில் அமைச்சர் பி.மூர்த்தி மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் பகுதியில் வடக்கு மாவட்ட செயலாளராகவும். திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி தொகுதியைச் சேர்த்து மணிமாறன் தெற்கு மாவட்ட செயலாளராகவும். மீதமுள்ள மதுரை தெற்கு, மேற்கு, மத்தி, வடக்கு என மாநகர் சட்ட மன்ற தொகுதிகளை கோ.தளபதி மாநகர் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து கவனத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகரில் உள்ள மேற்கு தொகுதியை மட்டும் கூடுதலாக அமைச்சர் பி.மூர்த்திக்கு தி.மு.க., தலைமை பொறுப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க.,பொறுப்பு அமைச்சர் மூர்த்தி கையில் வந்துள்ளதால் அப்பகுதி தி.மு.க., தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.,பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நட்பு வைத்திருந்தாலும், அமைச்சர் மூர்த்தி நேரடியாக உதயநிதி ஸ்டாலின் நற்பெயரை பெற்றுள்ளார். மூர்த்தி எந்த நிகழ்ச்சியை செய்தாலும் இயக்குநர் ஷங்கர் பட பாணியில் செய்வார் என்று உதயநிதியே மேடைகளில் புகழ்ந்து தள்ளுவார். இப்படியிருக்க தான் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியையும் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி வசம் ஒப்படைத்துள்ளது. இதனால் மூர்த்தி தனது மாவட்ட செயலாளர் பதவியை மதுரை மாநகர் பகுதிக்குள்ளும் தடம் பதிக்கிறார். கோ.தளபதி தொண்டர்களை வெகுவாக கவரவில்லை என்ற குற்றசாட்டு உள்ள சூழலில் இதனை மாற்றும் வகையில் மூர்த்தி தனது முதல் நிகழ்ச்சியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.
இதனால் மதுரை வடக்கு மாவட்ட செயலாளார் மூர்த்தியின் கீழ், மேற்கு சட்டமன்ற தொகுதியே தற்போது களைகட்டியுள்ளது. மறுபக்கம் அதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளரும், மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ சற்று அப்செட்டில் உள்ளாத சொல்லப்படுகிறது. அமைச்சர் மூர்த்திக்கு மதுரை கிழக்கு தொகுதி மிகப்பெரும் சாதகமாக உள்ளதால், மூர்த்தி வேறு தொகுதிக்கு மாறமாட்டார். தேர்தலில் நேரடியாக மேற்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்றாலும் அவருடைய நிழலை மேற்கில் போட்டியிட வைப்பார். இதனால் மேற்கிலும் இனி மூர்த்தி கூடுதல் கவனம் செலுத்துவார். இதனால் செல்லூர் ராஜூ கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும் என்றே பரவலாக பேசப்படுகிறது.
அதே போல் வரும் 28ஆம் தேதி மேற்கு தொகுதியினுடைய என்னென்ன அடிப்படை தேவைகள் செய்ய வேண்டும். 22 வார்டுகள் இருக்கிறது, ஒரு பேரூராட்சி இருக்கிறது. ஏழு பஞ்சாயத்து இருக்கிறது. அதற்கான பணிகளை செய்வதற்கான ஆய்வு கூட்டத்தை 28ஆம் தேதி எம்.எஸ் மகாலில் நடத்த இருக்கிறோம் என மூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு தொகுதியில் பணிகள் தொடரவுள்ளது.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் மற்றும் மூர்த்தி இடையே கசப்பான நட்பு தான் உள்ளது என சொல்லப்பட்ட சூழலில் தற்போது ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டனர். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்போடு இருப்பாதகவும் தெரிவித்தனர். மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதியையும் வெற்றிபெறலாம் என தொண்டர்களையும் உற்சாகப்படுத்திப் பேசியுள்ளனர். இதனால் மதுரை மேற்கு தொகுதியில் 3 முறை வெற்றிபெற்ற செல்லூர் ராஜூவை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. செல்லூர் ராஜூ தொகுதி மாறுவாரா? இல்லை மூர்த்தியின் அரசியலை முறியடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.