தமிழகத்தில் வட மாநில இளைஞர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் திருப்பூர், கோயம்பத்தூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வேலைக்கு சென்ற அவர்கள் நாளையடைவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் படையெடுத்து செல்கின்றனர். கட்டிட வேலை தொடங்கி, ஹோட்டல், டீக்கடை, துணிக்கடை என பல துறைகளில் காலடி வைத்துள்ளனர். இதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பினாலும், இருக்க இடம், உணவாக சப்பாத்தி கொடுத்தால் போதும், காலம் நேரம் பார்க்காமல் வடமாநில இளைஞர்கள் உழைப்பதால், பெரும் நிறுவன உரிமையாளர்கள் அவர்களையே பணிக்கு அமர்த்தி வருகின்றனர்.
வடமாநில இளைஞர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலம் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் வடகிழக்கு மாநிலங்கள் பல்வேறு துறையில் வளர்ச்சியை அடைந்து வருகிறது எனவும் புதிய விமான நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது என்ற அவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பாதுகாப்பற்ற மாநிலங்களாக உருவகப்படுத்தப்பட்டன என்கிறார். இதனால் முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்யவே அஞ்சும் நிலை இருந்ததாக்க குறிப்பிட்ட அவர் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற அடிப்படையில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற வடகிழக்கு மாநிலம் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில் தொடந்து பேசிய அவர் வடகிழக்கு மாநிலங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது எனவும் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டுக்கே முன்னுதாரமாக வடகிழக்கு மாநிலங்கள் விளங்குகிறது, வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்கு எங்கு சென்று இருந்தாலும் படித்த முடித்த பிறகு சொந்த மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்கவேண்டும் எனவும் மாநில வளர்ச்சியில் பங்காற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழகத்தில் 1.5 கோடி மக்கள் முத்ரா லோன் பெற்று தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் 50 லட்சம் பேர் பெண்கள் என பெருமிதம் தெரிவித்த அவர், அதே போல வடகிழக்கு மாநில மாணவர்கள் உங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று தொழில் துவங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.