திருப்பரங்குன்றம் கோவில் மலை விவகாரத்தில் மதவாத சக்திகள் ஒற்றுமையாக உள்ள இந்து- முஸ்லிம் மக்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :- நான் பிரமலை கள்ளர் சமுதாயத்தில் சிக்கந்தர் மலை கோவில் குடும்பிடும் பிரிவை சேர்ந்தவன். பிரன்மலை கள்ளர் சமுதாயத்தினர் திடியன், வாலாந்தூர், புத்தூர், கருமாத்தூர் உள்ளிட்ட 8 நாடுகளாக பிரித்து வாழ்ந்து வருகிறோம். திருப்பரங்குன்றத்தில் 400 முதல் 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியேறியவர்கள் நாங்கள். அந்த மலைக்கும், அந்த பகுதிக்கும் பாதுகாவல் நாங்கள்தான். அதனால் தான் சிக்கந்தர் மலை கோவில் குடும்பிடுபவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. சிக்கந்தர் மலையில் வசித்ததால் நாங்கள் உசிலம்பட்டிக்கு வர நாள் ஆகிவிட்டது. அதனால் கள்ளர் நாடு பிரிக்கப்பட்டபோது நாங்கள் அதில் இல்லை. பிரித்த பிறகு நாங்கள் தாமதமாக வந்து சேர்ந்தோம். இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியர் ஆட்சி மதுரையில் இருந்தது. அப்போது சிக்கந்தர் என்பவர் இறந்ததால் அங்கு தர்கா போன்று அமைத்து வழிபட்டு வந்தனர். அந்த தர்காவுக்கு வருபவர்களில் இந்துக்கள் தான் அதிகம். இதில் பிரன்மலை கள்ளர்களுக்கோ, அங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
இப்போது புதிதாக வந்து கிடாய் வெட்டுவேன், பிரியாணி கொடுப்பேன், ரத்த பலி காமிப்பேன் என்று சொல்லும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து – முஸ்லீம்களுக்கு இடையே எந்த பிரிவினையும் இல்லை. தேவையின்றி இந்து முன்னணி – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் விவாதத்தை ஏற்படுத்துவது மாபெரும் தவறாகும். சிக்கந்தர் மலையில் கோவிலில் கிடாய் வெட்டுவது என்று சொல்வதே தவறு. அது எப்போதாவது ஒருமுறைதான் செய்வார்கள். வழக்கமாக அங்கு இதுபோன்று செய்வது இல்லை. இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தர்காகளுக்கு செல்வது கிடையாது. திருப்பரங்குன்றம் கோவில் மலையை, சிக்கந்தர் மலை என மாற்ற யாரும் முயற்சிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்- இந்து முன்னணி போன்றோரின் தொடர் போராட்டங்களால் திருப்பரங்குன்றம் பகுதி பெதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் பொது அமைதியை பாதுகாப்பதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கர் தர்காவையே, இந்துக்கள் தமக்கு சொந்தமான மலையாகத்தான் பார்க்கிறோம். எப்போதும் போலவும் சிக்கந்தர் அங்கிருக்கட்டும், முருகன் கோவில் இங்கேயே இருக்கட்டும். வழிபடுபவர்கள் இரண்டு இடங்களுக்கும் செல்லட்டும். பிரமலை கள்ளர் சமுதாயத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே கலாச்சார ஒற்றுமை அதிகம் உள்ளது. அதற்கு காரணம் இஸ்லாமியர்கள் காலம் காலமாக இங்கு வாழ்ந்தவர்கள்தான். பின்னர் இஸ்லாத்துக்கு மாறினார்கள். ஆனால் நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். சில மதவாத அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை கையில் எடுத்து மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதுபோன்ற மதவாத பிரச்சினைகளை எழுப்புவதால் தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் வளராது என்று கூறினார்.