2024 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் நாதக சார்பில் போட்டியிட்டவர் ஜெகதீச பாண்டியன். 26 ஆண்டுகளாக இக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார்.
தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அடிக்கடி குருமூர்த்தியை சந்தித்த சீமான், அவரது வழிகாட்டுதலின் பேரில், பெரியாரையும், பிரபாகரனையும் எதிர் எதிராக நிறுத்துவது, தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம். அனைத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மேடையில் பேசும் சீமான், கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்காமலேயே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஆர்.எஸ்.எஸ். தாக்கம் கொண்டவரை பொதுச்செயலாளராக நியமித்தது ஏன்..?. நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படுகிற பணம், தலைமை அலுவலகத்தில் இருப்பவர்களால் ஊதாரித்தனமாக செலவு செய்யப்படுகிறது.
குறிப்பாக, கட்சி பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவது, புதிய வாகனம் வாங்குவது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை சீமான் வாடிக்கையாக வைத்துள்ளார். நிர்வாக ரீதியான சிக்கலை கூட சரி செய்து விடலாம் என காத்திருந்த சமயத்தில், சீமான் கொள்கையிலேயே முரண்பட்டு நிற்கிறார். இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய, வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு, விலகுகிறேன் அண்ணா. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.