தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பரந்தூர் சென்று வந்த நிலையில் தொடர்ந்து அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 24/01/2025 ஆம் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 19 மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பகுதி, பேரூர், ஒன்றியச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் லஞ்சம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று (29/01/2025) பனையூரில் புதிய நிர்வாகிகள் உடனான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்களுக்கு ஆணைகளை வழங்கிய நடிகர் விஜய், ”தலைமைக்கு புகார்கள் வரும் பட்சத்தில் மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது. கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் உரிய நிர்வாக வாய்ப்பையும், பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும். நிர்வாகப் பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசம் செய்யக்கூடாது. நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சியின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும்.
2026 நிச்சயமாக நம் கட்சி வெற்றி பெறும். கட்சிக்கு உண்மையாக நேர்மையாக உழைக்க வேண்டும். மக்கள் இயக்கமாக இருந்தபோது நன்றாக பணியாற்றி வந்தீர்கள், அதேபோல் கட்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இப்போது உங்களை நம்பியே கட்சியை தொடங்கி இருக்கிறேன். மக்களுக்காகவே தமிழக வெற்றிக் கழகம். எனவே நீங்கள் மக்களுக்காக செயல்பட வேண்டும்” என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.