தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் தொடர்ந்து போலி நகைகளை அடகு வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்த 3 பேரை கள்ளப்பெரம்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தனியார் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் நிதியுதவி மட்டுமல்லாமல் நகை அடகு வைத்து பணம் பெறும் வசதியும் உள்ளது. சிறிது வட்டி அதிகம் என்றாலும் கேட்ட அளவுக்கு பணம் கிடைக்கும் என்பதால் பலரும் தனியார் நிதி நிறுவனத்தை நாடி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன கிளைக்கு நேற்று 2 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் கை வளையல் மற்றும் கைச்செயின் ஆகியவற்றை அடமானம் வைக்க வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். அந்த இருவரும் ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நிதி நிறுவன கிளைக்கு அடிகை வருகை தந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் வரும்போதும் வளையல் மற்றும் கைச் செயினை மட்டும் தான் அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி செல்வதுமாக இருந்துள்ளது. இந்த முறையும் மீண்டும் அதே போன்று கைச்செயின், வளையல் ஆகியவற்றை அடமானம் வைக்க வேண்டும் என சொல்லியதால் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வேலைப் பார்க்கும் அதிகாரி கஜேந்திரன் என்பவர் கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார். மேலும் அவர்கள் இருவரும் ஏற்கனவே அடமானம் வைத்த நகைகளையும் தரம் செய்ய சோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நகைகளில் ஹால்மார்க் முத்திரையும் இருந்துள்ளதால் சோதனை செய்யாமல் பெற்றுள்ளனர். ஆனால் தரம் செய்ய சோதனை செய்தபோது அவை வெள்ளி நகைகள் என்றும், அதற்கு தங்கம் முலாம் பூசி அடகு வைத்ததும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் தனியார் நிதி நிறுவனத்திற்கு கள்ளப்பெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜ்கமல் மற்றும் போலீசார் வருகை தந்தனர். அவர்கள் பெண்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண்கள் இருவரும் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா மற்றும் தஞ்சாவூர் சீனிவாசபுரம், செக்கடி பகுதியை சேர்ந்த சின்னப்பாண்டி என்பவரின் மனைவி சரஸ்வதி என தெரிய வந்தது. இவர்களிடம் போலி நகைகளை அடமானம் வைக்க கொடுத்தது வேறு நபர் என விசாரணையில் தெரிய வந்தது.
அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் உள்ள கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மணிவண்ணனை போலீசார் கைது செய்ய முடிவெடுத்தனர். இதற்கிடையில் அவரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அப்பகுதியில் மறைந்திருந்த மணிவண்ணன் சிக்கினார். அவரை பிடித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் வெளியானது. அதில் கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுபோன்ற போலி நகைகளை அடிக்கடி வாங்கி வந்து அடமானம் வைப்பதே மணிவண்ணன் வேலையாக இருந்துள்ளது. அவர் இதுவரை ரூ.16.31 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தனியார் நிதி நிறுவனம் சார்பில் கஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணன் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.