பிஜேபி யில் பிராமணர்களே இல்லாமல் பண்ணியது அண்ணாமலை தான்! – S ve சேகர்.

நடிகர் எஸ்.வி சேகர் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார். சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா?

பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை. பிராமணர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள். ஆனால், 3 சதவீதம் என்கிறார்கள். பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு 3 பேர் இருந்தார்கள். இப்போது ஒருவர் கூட இல்லை. பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று நாளை திமுக அறிவித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன்.

யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறான அயோக்கியத்தனமான செயல். இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள். பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருக்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக்கொண்டு அலைய முடியாது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்கள் என் வீட்டில் இருக்கிறது. என் வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படமும் தான் இருக்கிறது

எப்போது பள்ளிக்கூடத்தில் நீ என்ன சாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை சாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது. பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என்பதை தெரிந்திருக்க வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது. கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம். தனக்கு அண்ணாமலை வாய்ப்பு கொடுப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அது ரிவர்ஸில் வொர்க் அவுட் ஆகிவிட்டது. ஆனால், சுதாகர் ரெட்டி போன்ற பாஜக தலைவர்களே அதனை எதிர்த்துவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது. ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள். கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும். ஏனென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response