1931, அக்டோபர் 15 அன்று எளிய குடும்பத்தில் அவுல் பக்கீர் ஜைனுல்லாபுதீன் அப்துல் கலாம் பிறந்தார். சிறு வயதில் அம்மாவிடமும் பாட்டி யிடமும் நபிகள், ராமன் கதைகளைக் கேட்டு வளர்ந்தார்.
அப்பாவும் அம்மாவும் எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதைச் சொல்லி வளர்த்தார்கள். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாகப் பக்கத்து வகுப்புக்குள் நுழைந்த கலாமை ஆசிரியர் பிரம்பால் அடித்து விட்டார்.
சில மாதங்களில் அதே ஆசிரியர் பள்ளி அசெம்ப்ளியில் வைத்து, கணிதத்தில் நூறு மதிப்பெண் வாங்கியதற்காகப் பாராட்டினார்! பிற்காலத்தில் எல்லாருக்கும் பெருமை சேர்க்கப் போகிறார் என்றும் கணித்தார். அக்காவின் கணவர் அஹமது ஜலாலுதீனும் கலாமும் தினமும் கடற்கரைக்குச் செல்வார்கள். அன்று பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்று அஹமதுவிடம் கேட்டார் கலாம். ‘மனிதனே விமானத்தில் பறக்க ஆரம்பிச்சிட்டான். தினமும் செய்தித்தாள் படி.
நூலகத்துக்குச் சென்று புத்தகங்கள் வாசி’ என்று வழிகாட்டினார் அஹமது. கலாமும் ராமநாத சாஸ்திரியும் நண்பர்கள். ஒருநாள் ஆசிரியர் ஒருவர் மதத்தைக் காரணம் காட்டி இருவரையும் பிரித்து உட்கார வைத்தார். இருவரும் தங்கள் பெற்றோரிடம் சொன்னார்கள். மறுநாள் ‘மனிதர்களுக்குள் இப்படிப் பாகுபாடு பார்க்கலாமா, நாங்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்’ என்று கலாமின் அப்பா சொன்னதும் அந்த ஆசிரியர் தன் தவறை உணர்ந்தார்.
விடுமுறை நாள்களில் அண்ணனுக்கு உதவியாகக் கடையில் வேலை செய்வார் கலாம். ஆறாம் வகுப்புக்கு ராமநாதபுரத்தில் இருந்த புகழ்பெற்ற ஸ்வார்ட்ஸ் பள்ளிக்குச் சென்றார் கலாம். அங்கே அவருக்கு அய்யாதுரை சாலமனின் நட்பு கிடைத்தது. அவர்தான் ‘எல்லாத்துக்கும் ஆசைப்படு. ஆசை நிறைவேற கனவு காண். கனவு நிறைவேற நம்பிக்கையோடு முயற்சி செய். இதுதான் வெற்றியின் ரகசியம்’ என்றார். அதை நம்பிக்கையோடு பிடித்துக்கொண்டார் கலாம்.
பள்ளிப் படிப்பை முடித்த கலாம், 1950ஆம் ஆண்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். இலக்கியம், தத்துவம் போன்ற துறைகளில் இருந்த ஆர்வம் கல்லூரி இறுதியாண்டில் இயற்பியலுக்கு வந்தது. சென்னை எம்.ஐ.டி.யில் விமானப் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
அங்கு செயல் விளக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்கள் கலாமைக் கவர்ந்தன. ‘ஆகாய விமானம் கட்டுவோம்’ என்கிற அவருடைய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது. கலாம் உள்ளிட்ட மாணவர் களுக்குத் தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தை வடிவமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கலாமும் நண்பர்களும் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் செய்து காட்டி, பாராட்டுகளைப் பெற்றார்கள்.
எம்.ஐ.டி. பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் கலாமும் அவர் நண்பர்களும் கிளைடர் என்கிற எஞ்சின் இல்லாத விமானத்தை வடிவமைத்தனர். ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸில் பயிற்சி முடிந்த தும் விமானப் பொறியியல் பட்டதாரி யாக வெளியே வந்தார் கலாம். விமானப்படைத் தேர்வில் கலாம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்ததால் விமானியாகும் எண்ணம் ஈடேற வில்லை. சில காலம் வருத்தத்தில் இருந்த கலாம், டெல்லியில் விமானங்களின் ஆய்வு, வடிவமைப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டார். பின்னர் பெங்களூருவில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் அமைப்புக்கு மாற்றப்பட்டார்.
‘ஹோவர் கிராஃப்ட்’ என்பது தரை யிலும் நீரிலும் தேவைப்படும்போது சில அடிகள் தரைக்கு மேலே உயர்ந்து பறக்கும் இயந்திரம். வெளிநாட்டு உதவி இல்லாமல் ஹோவர் கிராஃப்ட் உருவாக்கும் வாய்ப்பு கலாம் குழுவினருக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ‘நந்தி’ என்கிற பெயரில் அந்த இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கினார்கள்.
கலாமுக்கு இந்திய விண்வெளி ஆய்வகத்தில் வேலை செய்வதற்கு அழைப்பு வந்தது. நேர்முகத் தேர்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் தந்தை விக்ரம் சாராபாயைச் சந்தித்தார். அனுபவம் இல்லாவிட்டாலும் இந்த வேலையைக் கலாமால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்பி, சேர்த்துக்கொண்டார் அவர்.
கேரளத்தில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்தார் கலாம். செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்து வதற்கான ராக்கெட்டுகளை வடிவமைக்கும் பணி நடைபெற்றது. அங்கிருந்து பயிற்சிக்காக ஆறு மாதங்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டார் கலாம்.
ரேடோ இயந்திரங்களைத் தயாரிக்கும் பொறுப்பை விக்ரம் சாராபாய், கலாம் குழுவினரிடம் ஒப்படைத்தார். அப்போது விக்ரம் சாராபாய் மரணமடைந்தார். மனம் உடைந்தார் கலாம். சாராபாய்க்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கடினமாக உழைத்து இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ரேடோ தயாரானது. கலாம் குழுவினருக்கு அது பெருமையைத் தேடித் தந்தது.
1980இல் ரோஹிணி செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. பத்து நிமிடங்களில் வட்டப்பாதையில் சுற்ற ஆரம்பித்தது. இதன் மூலம் அறிவியல் வளர்ச்சியில் அழுத்த மாகக் கால்பதித்தது இந்தியா. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி ஆகியவை எல்லாம் கலாமின் புகழ் பாடின. 1981இல் கலாமின் அறிவியல் பணிகளுக்காக நாட்டின் உயர்ந்த விருதான பத்ம பூஷண் வழங்கப் பட்டது.
1982இல் விண்வெளி ஆய்வுத் துறையிலிருந்து பாதுகாப்பு ஆய்வுப் பணிக்குச் சென்றார் கலாம். நாக், ப்ருத்வி, ஆகாஷ், திரிஷுல், அக்னி என்று திட்டங்கள் கலாம் வழி நடத்துதலில் மேற்கொள்ளப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ப்ருத்வி ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. அண்டை நாடுகள் இந்தியாவைக் கண்டு வியந்தன.
அக்னி ஏவுகணையை நினைத்ததுபோல் செயல்படுத்த முடியவில்லை. அந்தப் பணியில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை இழந்தனர். ‘நாங்கள் தயாரித்த எஸ்.எல்.வி. எங்கள் கண் முன்னே வெடித்துக் கடலில் விழுந்தது. மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தோம். இவையெல்லாம் சாதாரண தடைகள். வெற்றி தள்ளிப் போடப்பட்டிருக்கு, அவ்வளவுதான்’ என்று நம்பிக்கை அளித்தார் கலாம். 1989இல் அக்னி வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. ‘இது வெறும் ஏவுகணை அல்ல. ஒவ்வோர் இந்தியரின் இதய நெருப்பு’ என்று அனைவரும் பெருமிதப்பட்டனர்.
மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகர் பொறுப்புக்குச் சென்றார் கலாம். 1998ஆம் ஆண்டு கலாம் தலைமையில் பொக்ரானில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனையைச் செய்து முடித்தது. கலாமின் புகழ் பரவியது. இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ 1997ஆம் ஆண்டு கலாமுக்கு வழங்கப் பட்டது.
1999இல் அருண் திவாரி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ என்கிற பெயரில் நூலாக வெளியிட்டார். ‘அக்னிச் சிறகுகள்’ என்கிற பெயரில் தமிழில் வெளி வந்த அந்த நூல் விற்பனையில் உச்சத்தைத் தொட்டது.
70 வயதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார் கலாம்.
2002ஆம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். சுதந்திரப் போராட்டக் காலத்துக்குப் பிறகு, ‘மக்களின் தலைவரா’கத் திகழ்ந்தார் கலாம். 2007ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் மாண வர்களுடன் உரையாற்றுவதைத் தன் இறுதி மூச்சு உள்ளவரை செய்துகொண்டிருந்தார் கலாம். 2015, ஜூலை 27 அன்று ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கியவர், நிரந்தர உறக்கத் துக்குச் சென்றுவிட்டார்.