சென்னையை வாட்டி எடுக்கும் கனமழை! எப்பொழுதுதான் இதற்கு தீர்வு?

நேற்று இரவு முதல் சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, சென்னையில் எங்குமே தண்ணீர் தேங்காது என்று முதல்வர் கூறியிருந்தார்.

90 சதவீத மழைநீர் வடிக்கால் பணிகள் முடிவடைந்து விட்டதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலின், சென்னை பெருநகர மேயர் ப்ரியா, அமைச்சர் நேரு உட்பட மூத்த அமைச்சர்கள் கூறி இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மிதக்கிறது. பல இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், நாளை 20 செ.மீட்டருக்கும் அதிகமான அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே கடற்கரையில் கரையை கடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி பகுதிகளில் பல இடங்களில் இடுப்பளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.

இன்றும், நாளையும் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக பல தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நகரின் பல பகுதிகளிலும் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியதால் பல வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வேளச்சேரி, சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அங்குள்ள மக்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் வீடு இருக்கும் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால், கருணாநிதி வீட்டிற்குள்ளும் மழைநீர் புகுந்தது. தண்ணீர் புகாமல் இருக்க மணல் மூட்டை வைத்து தடுத்திருந்தாலும் அதனையும் மீறி மழைநீர் உள்ளே சென்றுள்ளது.

மழை நீர் தேங்கியிருப்பதால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபக்கம் என்றால், மற்றொரு புறம் பல பகுதிகளிலும் சாலைகளில் பெரிய பெரிய பள்ளங்களைத் தோண்டி வைத்திருப்பதால் பல சாலைகளைப் பயன்படுத்தவே மக்கள் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் 5 சுரங்க பாதை பாலங்கள் மழைநீர் நிரம்பியதால் மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. நாளை அதிகனமழையை எப்படி எதிர்கொள்வது? மீண்டும் மழைகாலத்தை சிறப்பாக கையாண்டோம் என்று புகைப்படத்திற்கும் வீடியோக்களுக்கும் அரசியல் தலைவர்கள் போஸ் கொடுத்து விட்டு செல்வார்களா? என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வடசென்னை மட்டுமே முழு சென்னை மாநகரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை மாநகர மேயர் சுற்றிச் சுழன்று மழைக்கால நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டாமா? குறைந்த பட்சமாக சென்னை நகரில் பெரும்பான்மையாக இருக்கின்ற திமுக கவுன்சிலர்களையாவது மீட்பு பணிகளைச் செய்ய அறிவுறுத்தியிருக்கலாம். பல பகுதிகளிலும் கவுன்சிலர்கள் கூட வீட்டை விட்டு வெளியே வந்து மீட்பு பணிகளில் ஈடுபடவில்லை என்று தங்கள் ஆதங்கத்தைப் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response