சென்னையில் பிரியாணி கடைகளில் உணவில் தரம் இல்லை என்று எழுந்த புகாரில் அடுத்தடுத்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சீல் வைத்து வருகிறார்கள். சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் அப்பு என்பவர் தன்னுடைய பெயரில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடை சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான கடையாகும். கடை உரிமையாளரான அப்பு, பிரியாணி தொடர்பான ஏராளமான வீடியோக்களை அவர் பதிவு செய்தார். அதுமட்டுமின்றி அந்த கடையில் சுவை பலருக்கும் பிடித்து போனதால், சாப்பிட வாடிக்கையாளர்கள் படையெடுத்தனர்.
இதன் மூலம் சமூக வலைதளங்களினால் அப்பு கடை பிரியாணி மிகவும் பிரபலமானது. தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அப்பு கடையின் கிளைகள் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் அண்மைக்காலமாக அப்பு கடையின் பிரியாணி, தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்.
இது தவிர சிலர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகாரும் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று சென்றார்கள். அங்கு அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுகாதாரமின்றி பிரியாணி சமைத்ததாக கூறி, சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.. இதனால் வேதனை பிரபல அப்பு பிரியாணி கடை உரிமையாளர் அப்பு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். காசு இல்லாதவர்கள் வளரவேகூடாதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் சாலையில் பிரியாணியை கொட்டி போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த பிரச்சனை ஒருபுறம் எனில் சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகர் கிளையில் உள்ள பிரபலமான பிரியாணி கடையான எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 35 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக புகார்கள் உள்ளது. இதுபற்றி வாடிக்கையாளர்கள் சிலர் “பொண்ணு, பொண்டாட்டி எல்லாம் ஹாஸ்பிடல்ல படுத்து கிடக்குறாங்க.. எங்க வயிறுலாம் எரியுது.. குடும்பத்துக்கு எதாச்சும் ஆனா யாரு சார் பொறுப்பு”? என்று ஆவேசமாக கேட்டனர்.
வீடியோக்கள் வைரலான நிலையில், கொடுங்கையூர் எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சென்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 14 நாட்களுக்குள் குறைகளை சரி செய்ய சொல்லி நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போதைய நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பிரபல ஓட்டல்கள், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் அடுத்தடுத்து விரைந்து சென்று ஆய்வு செய்து புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.