நடிகர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த அட்வைஸ்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். கட்சியின் ஒவ்வொரு அணியையும் வலுவாக கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அதேநேரத்தில் கோட் படத்தின் ரிலீஸுக்கு பிறகு செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகள், போலீசார் தரப்பில் அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பதாக விஜய் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்னை ஐயப்பந்தாங்கலில் பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தங்களுக்கு கூட்டம் கூடினால் நாமும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அறிவு இருக்காது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து சாதித்தது எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு போய்விட்டது.

அதற்கு பிறகு நடிகர்கள் யாரும் அரசியலில் சாதிக்க முடியவில்லை. இனிமேல் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களது கனவு எடுபடாது” என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 11) நடைபெற்ற Homepreneur விருது வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி கலந்துகொண்டார்.

தூத்துக்குடி எம்.பியாக பொதுமக்களுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து சேவையாற்றியதற்காக அவருக்கு Inspirational விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது, “வெற்றிகரமாக திரையுலக பயணத்தை நிறைவு செய்து அரசியலுக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய்க்கு ஒரு சீனியர் பொலிடிசியனாக உங்களின் அட்வைஸ் என்ன?” என்று நெறியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கனிமொழி, “சிறு வயதில் இருந்தே விஜய்யின் குடும்பத்தோடு எனக்கு பழக்கமிருக்கிறது. அனைவரும் கொண்டாடக்கூடிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

இந்த உயரத்தை அடைவதற்கு அதற்கான உழைப்பு, பாதை அவருக்கு தெளிவாக இருந்ததால் தான் இந்த இடத்திற்கு வர முடிந்திருக்கிறது. அதே தெளிவோடும், அதே உழைப்போடும் அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response