கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
கள்ளச்சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டப்பேரவையில் இன்று அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூயிருந்தார். அதன்படி இன்று கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.
அதில் கள்ளச்சாராய விற்பனைக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் திருத்தம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கல் என அனைத்துவிதமான குற்றங்களையும் தடுக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மசோதாவில் கள்ளச்சாராய குற்றங்களான பதுக்கல் மற்றும் விற்பனையில் பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு, ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன், 10 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும். தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை அந்த பகுதியில் இருந்தே நீக்கம் செய்ய மதுவிலக்கு, புலனாய்வு அதிகாரியால் விண்ணப்பம் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து, அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.