நடிகர் விஜயுடன் ரகசிய கூட்டணி வைக்கிறதா அதிமுக?

நடிகர் விஜயிடம் கூட்டணி தொடர்பாக அதிமுக ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

முக்கியமாக 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுக ரகசியமாக காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

விஜயை தங்கள் பக்கம் கொண்டு வர அதிமுக திட்டமிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன. பொதுவாக தமிழ்நாட்டில் புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்கினால் வாக்கு சதவிகிதம் முதல் தேர்தலில் 5 வரை இருக்கும். முறையான கட்டமைப்பு இருந்த தேமுதிகவிற்கே 5 சதவிகிதம்தான் இருந்தது. கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போதும் மொத்தமாக கிட்டத்தட்ட 4 சதவிகிதம் வாக்குகள் வந்தன.

இப்படிப்பட்ட நிலையில் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகபட்சம் 10 முதல் 12 சதவீதம் கொடுத்தால் கூட.. அவர்கள் அதிமுக உடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதே போல் ஆந்திராவில் “அதிரடி” அரசியல் செய்து வந்த பவன் கல்யாண்.. தற்போது அங்கே அமைச்சராகி உள்ளார். பவன் கல்யாண் அங்கே துணை முதல்வராக உயர்ந்து உள்ளார்.

அங்கே வலுவான ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்த பவன் – நாயுடு ஜோடி உதவியது. அதேபோல் எடப்பாடி – விஜய் ஜோடி ஸ்டாலினை வீழ்த்தும் என்று அதிமுக நினைக்கிறதாம்.

மேலும் தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தர்க்க அடிப்படையில் பார்க்காமல் சதவிகித அடிப்படையில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம்.

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம் .

தனியாக திமுக வென்ற வாக்குகள் 26.93 சதவிகிதம் .

அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் .

தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம் .

நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.

இதில் விஜய் வாக்கு வங்கி அதிமுகவிற்கு போனால் தேர்தல் முடிவுகள் கூட மாறும் வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே அதிமுகவில் விஜய்க்கு கொஞ்சம் நெருக்கமாக, அன்பாக இருக்கும் மாஜிக்கள் மூலம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்கிறார்கள். 2026க்குள் இது கூட்டணியாக உருவெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Response