8 தோட்டாக்கள், ஜீவி, ஜோதி போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து வெற்றியடைந்த நடிகர் வெற்றி 4 கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள படம் “மெமரீஸ்”.
கதைப்படி, மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில், தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார், வெற்றி. வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். நான் லீனியர் படம் என்பதால் பிளாஷ் பேக்கில் ஆரம்பிக்கிறது இப்படத்தின் கதை.
ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் வெங்கி (வெற்றி). சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை அறிந்து கொள்கிறார் வெற்றி.
இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், “நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.” கேள்வியாய் கேட்கிறார். இதற்கு பதிலாக, “நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்கள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என ட்விஸ்ட் வைக்கிறார், அந்த மர்ம நபர்.
அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஹீரோவை துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் “என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்…என் மகளை என்ன செய்தாய்?” என கேட்கிறார்.
ஹீரோவை சுற்றி என்னதான் நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது அவர்தானா? அவரை துரத்தும் நபர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு? என்ற பல கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது இரண்டாம் பாதி.
வெற்றி என்ற பெயரோ என்னவோ தெரியவில்லை, தொட்டதெல்லாம் வெற்றியடைந்து வந்த வெற்றிக்கு இப்படம் முதல் சறுக்கல் என்றே சொல்லலாம்.
வழக்கமான எக்ஸ்பிரேஷன்கள், தான் சிந்திக்கும் காட்சியில் புருவத்தை தூக்கிக் கொண்டு பேசுவதும். கோபமான காட்சிகளில் பற்களை கடித்துக்கொண்டு நடிப்பதும் செண்டிமெண்ட் காட்சிகளில் உயிரோட்டம் இல்லாமல் நடித்தும் நம்மை சோதித்துள்ளார் வெற்றி.
நாயகியாக நடித்த பார்வதி அருண் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.
உடன் நடித்த ஆர்.என்.ஆர்.மனோகர், ரமேஷ் திலக், ஹரிஷ் பேரடி என அனைவரின் நடிப்பும் யதார்த்தம்.
இன்செப்ஷன் போன்ற படத்தின் கதையை இன்ஸ்பயர் செய்து இப்படத்தின் கதையமைத்தார்களா இயக்குனர்கள் என்பது சந்தேகம்.
ஹாலிவுட் ரேஞ்சில் படம் எடுக்க நினைத்தார்களே தவிர, இந்த கதை நம் வெகுஜன மக்களுக்கு புரியுமா என்று நினைத்தார்களா என்பது கேள்விக்குறி. ஆனால், கிடைத்த முதல் பட வாய்ப்பில் மிகவும் துணிச்சலாக எக்ஸ்பிரிமெண்டல் படத்தை இயக்கியதற்கு பாராட்டுக்கள்.
மெமரீஸ் டெலீடிங் அண்ட் இன்செர்ட்டிங் என்ற புதுவிதமான கான்செட்டில் இவர்கள் சிந்தித்து புதிய கதையை நமக்கு காட்சி படுத்தியுள்ளார்கள் இயக்குனர்களான ஷியாம் மற்றும் பிரவீன்.
மொத்தத்தில் மெமரீஸ் ஒரு முறை காணலாம்.